வியாழன், 23 டிசம்பர், 2021

 

டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்கின்ற யமுனா (31 March 1865 – 26 February 1887)

மும்பை கல்யாண் நகரில் பிறந்த இவரின் கதை.

"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஒரே கண்டிஷன். அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில், "இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க. பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்கிறாள். "சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம். பின்னாடி பாத்துக்கலாம்" என்று சமாதானம் சொல்கிறான் அவளின் கணவன்.



பெண்கல்வி

கல்யாணமும் ஆகி விடுகிறது. பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க, அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து, இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.

கணவனுடன் சேர்ந்து வாழும் ஆசையில் அம்மாவிற்கு தெரியாமல் ரகசியமாய் படிக்கிறாள். அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அவள் வயதுக்கே வந்து விடுகிறாள்.

இனி இந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்க முடியாது, நீங்கள் கூட்டிக்கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய படுத்தி யமுனாவை கோபாலுடன் அனுப்பி வைக்கிறார்கள்.

முதல் இரவு அறைக்குள் இருவரையும் தள்ளி தாளிட்டு, இந்த கிறுக்கனை நம்ப முடியாது என்று கதவில் காதை வைத்து உள்ளே எதாவது நடக்கிறதா என்று ஒட்டு கேட்க ஆரம்பிக்கிறாள் யமுனாவின் அம்மா.

அதை அறிந்த கோபால் கட்டிலை தன் கையை வைத்து ஆட்டியபடி, " நீ படித்த 10 ஆம் பெருக்கல் டேபிளை சொல்லு " என்று பள்ளி அறையை பரிட்சை அறை ஆக்குகிறான்.

அவள் முப்பதாவது டேபிளையே அனாசயமாக சொல்லிவிட்டு, "கட்டிலை ஆட்டாமலே கேட்கலாம்ல" என்று அப்பாவியாய் கேட்பவளை ஆனந்தமாய் பார்த்து, "இன்று முதல் உன் பெயர் கரைக்குள் அடங்கும் யமுனா அல்ல. கரையில்லா *ஆனந்தி* " என்கிறான்.

*பள்ளி அறையில் கல்வி* 

தினமும் இரவு பள்ளி அறையில் இவன் பாடம் சொல்லி கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாய் கற்கிறாள். காலை முதல் வீட்டு வேலை செய்து களைப்பாக இருப்பதாக சொல்லி படிக்க முடியாது என்று அடம் பிடித்து தூங்க ஆரம்பிக்கிறாள்.

மறுநாள் எழுந்து பார்த்தால் அவனே சமையல் வேலையை முடித்து வைத்து "இப்போ என்ன செய்வ?" என்பதை போல் பார்த்து விட்டு வேலைக்கு செல்கிறான். இரவு வந்த பொழுது அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கோபமாகி, எழுப்பி அறைய போகும் பொழுது தடுத்து கர்ப்பமாய் இருப்பதாக சொல்லிறாள்.

கர்ப்பமாய் இருப்பதை விட இந்த சாக்கில் படிக்காமல் இருக்கலாம் என்று சந்தோசம் ஆகிறாள். அவளை ஒரு ஆங்கிலேய ஆண் கைனக்காலஜிஸ்டிடம் கூட்டி செல்கிறான். அவள் மிகவும் சங்கோஜப்படுகிறாள்.

*பெண் டாக்டர் வேண்டும்*

"பெண் டாக்டராய் இருந்தால் நன்றாக இருக்கும்" என்கிறாள் திரும்பி வரும் பொழுது. "பெண்கள் படித்தால்தானே?" என்கிறான் புன்னகையுடன்.

இவளுக்கு பிரசவம் பார்த்த கையோடு தன் சொந்த ஊருக்கு விடுப்பில் போகிறார் அந்த டாக்டர்.

பத்தாவது நாளில் குழந்தை மிகுந்த காய்ச்சலில் அழுது கொண்டே இருக்கிறது. பக்கத்தில் வேறு ஆங்கிலேய மருத்துவர்கள் இல்லாததால் ஒரு கை வைத்தியரை கூப்பிட்டு வருகிறான். அவனிடம் மகிழ்ச்சியாக, அரை மணி நேரம் முன்பு வரை கத்திக்கொண்டிருந்த தன் மகள் இப்பொழுது அமைதியாக தூங்குகிறாள் என்றாள். நாடியை பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறுகிறான். அதிர்ச்சியில் உறைகிறாள்.

*மனு நீதியை மதிக்க வேண்டுமாம்?*

"குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன காரணம் என்ன? " என்று கோபாலிடம் கேட்டு புலம்புகிறாள். படித்த டாக்டர் பக்கத்தில் இல்லாததே என்கிறான். அவள் கண்களை துடைத்து கொண்டு, ஒரு உறுதியுடன், *"என்னை டாக்டர் ஆக்குங்கள்"* என்கிறாள்.

அவளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து திரியும் இவனை "மனு நீதியை மதிக்காத இவனெல்லாம் பிராமணன் இல்லை, பித்தன்" என்று ஊர் பழிக்கிறது.

1880 இல் கிறிஸ்டியன் மிஷனரிகளே பெண்களுக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. பெரும்பாலும் அது வெள்ளைய பெண்களுக்கே.

*கல்வியால் மதம் மாற்றம் எண்ணமும்*

இவன் விடுவதாக இல்லை. அந்த பள்ளியின் பாதரை பார்த்து, இயேசு அடிக்கடி கனவில் வருவதாகவும், தான் கிருஸ்துவத்துக்கு மாற விரும்புவதாகவும், அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் மனைவிக்கு படிப்பறிவு இல்லை, அவளை பள்ளியில் சேர்ந்து படித்தால் அதை புரிந்து கொண்டு தான் குடும்பத்துடன் கிறிஸ்துவத்திற்கு மாற உதவியாய் இருக்கும் என்று புருடா விட்டு சீட்டை வாங்கி விடுகிறான்.

சீட்டு வாங்கினாலும் சீட்டு இல்லை. கருப்பு பெண் என்று பழிக்க பட்டு தரையில் உட்கார வைக்க படுகிறாள். அவள் அதை பொருட் படுத்தாமல் படிப்பில் முனைப்பாய் இருக்கிறாள்.

அதற்குள் ஊர் பஞ்சாயத்து கூடி, மனு தர்மத்தின் படி பெண்கள் படிப்பது பாவச்செயல் என்பதால் இவன் குடும்பத்தை தீண்ட தகாத குடும்பமாய் அறிவிக்கிறது.


*அவமானம்*

தெரியாமல் ஒரு முறை பெஞ்சில் உட்கார்ந்து விட்டதனால் இவளை சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புகிறது பள்ளி. ஒரே சமயத்தில் மத மற்றும் இன பேதங்களால் இரு முனையிலும் அவமான படுத்த படுகிறாள்.

இவர்கள் என்ன நம்மை புறக்கணிப்பது. நாம் இவர்களை புறக்கணிப்போம் என்று மஹாராஷ்டிரத்தை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இவளை பள்ளி படிக்க வைக்கிறான்.

*அமேரிக்கா சென்று படிக்க ஆசை*

அமெரிக்கா நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் மிஷனரிகளுக்கு சலிக்காமல் கடிதம் எழுதுகிறான். இந்தியாவில் நிலைமை இவ்வாறு இருக்க..

*அமெரிக்காவில் ஆனந்தியின் கதையை, தியோடிஸா அறிய..*

நியூ ஜெர்சியில், பல் வலி தாங்க முடியாமல் இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறாள் தியோடிஸியா. அந்த பல் டாக்டருக்கோ கூட்டம் அதிகம், காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அலுத்துக்கொண்டே அந்த வரவேற்பு அறையில் உள்ள அந்த பத்திரிக்கையை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தால், அதில் *ஆனந்தி* என்ற இந்திய பெண் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் சிரம படுவதை பற்றி அவள் கணவன் எழுதிய கடிதத்தை வைத்து ஒரு கட்டுரையை படித்த ஆச்சரியத்தில், அவளுக்கு பல் வலியே மறந்து, அந்த முகம் தெரியாத ஆனந்தி மேல் ஒரு நேசம் வந்து விட்டது.



*பென்சில்வேனியா மருத்துவ கல்லூரி*

அவர்கள் விரைவில் கடித நண்பர்கள் ஆனார்கள். தியோடிஸியை சித்தி என்றே அழைப்பாள் ஆனந்தி. அது தியோடிஸிக்கு விநோதமாகவும், மிகவும் பிடித்தும் இருந்தது. அவள் ஆனந்திக்கு பென்சில்வேனியா மருத்துவ காலேஜில் சேருவதற்கு உதவி செய்தாள்.

இவள் அமேரிக்கா பயணப் படுவதற்கு அதே மனு தர்மத்தை வைத்து பெண் படிப்பே பாவம் அதுவும் கடல் கடந்து படிப்பது பெரும் பாவம் என்று கலாட்டா செய்தவர்களை பார்த்து "ஹிந்து பெண் டாக்டர்கள் இல்லாததாலேயே ஹிந்து பெண்கள் பலர் இறக்கிறார்கள். அவர்களை காப்பதற்காக நான் படிக்க போகிறேன். ஹிந்து பெண்கள் சாவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் தர்மம் என்றால் அதை ஏற்க போவது இல்லை " என்று தெளிவாக சொல்லி விட்டு படகு எறியவளை என்ன சொல்லி தடுப்பது என்று ஸ்தம்பித்தது, அந்த கும்பல்.

அமெரிக்கா சென்று டாக்டர் மட்டும் அல்ல எம். டி . ஜி யும் முடித்து விட்டு ஊர் திரும்பிய போது அதே கும்பல் அவளை தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது.



*22 வயதிலேயே மரணம்*

டிபி யில், தன் 22 ஆம் வயதில் மரண படுக்கையில், "நான் மெனக்கெட்டதெல்லாம் வீணாகி விட்டதே. பலருக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க போகிறேனே?" என்று விரக்தி அடையும் பொழுது, கோபால் சொல்கிறான் " நீ வீண் அல்ல. துருவ விண்மீன். உன்னை வழிகாட்டியாக கொண்டு, கோடி பெண்கள், பல்வேறு துறைகளிலும் திறக்காத கதவுகளை உடைத்து திறப்பார்கள்"

முதல் இந்திய பெண் முதுகலை மரு த்துவரானா ர் *ஆனந்தி கோபால்* இன்றும் பலருக்கு வழிகாட்டியே.



புதன், 22 டிசம்பர், 2021

 நீலகிரியின் தந்தை:  ஜான்  சல்லிவன் (John Sullivan)

சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார்.

பொருளடக்கம்

1 இளமைக்காலம்

2 கிழக்கிந்திய நிறுவனப்பணி

3 நீலகிரி உருவாக்கம்

4 குடும்பம்

5 இறப்பு

6 மேற்கோள்கள்

7 இவற்றையும் பார்க்கவும்

இளமைக்காலம்

சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர். இவரின் முயற்சியால் தஞ்சையை சுற்றி பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தாயார் பெயர் ஆன் சல்லினன் ஆகும். சான் சல்லினன் அரித்மெடிக் அண்ட் மெர்ச்சன்ட் அக்கௌன்டிங்க் ( Arithmetic and Merchant Accounting ) பிரிவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.



கிழக்கிந்திய நிறுவனப்பணி

சல்லிவன், தனது 15ஆவது வயதில் (ஆகத்து 1803) சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்தார். இதன் பிறகு சிறிது சிறிதாக உயர்ந்த இவர், 1806ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.



நீலகிரி உருவாக்கம்

கோத்தகிரியில் உள்ள நினைவகம்

இதன் பிறகு 1819ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடனும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அந்த பகுதியை சுற்றிப்பார்த்த இவர், அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்.  நீலகிரியின் முதல் கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இதன் பிறகு இந்தப் பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி, 1820ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார்.



இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். படகா பழங்குடி இன மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.



குடும்பம்

சல்லிவன் கென்ரித்தா என்பவரை 1820ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1822ம் ஆண்டு காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்து விட்டன. மேலும் 1838ம் ஆண்டு கென்ரித்தாவும் ஊட்டியிலேயே இறந்துவிட்டார். இவர்கள் மூவரின் உடல்களும் அங்கேயே புனித சிட்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் முதல் மகன் கென்றி எட்வர்ட் இவரைப் போலவே கோவை மாவட்ட ஆட்சியராக பின்னாட்களில் (1869ம் ஆண்டு) நியமிக்கப்பட்டார்.

(Grave of wife Henrietta and daughter Harriet in Ooty)



இறப்பு

பல கம்பெனி பொறுப்புகளை வகித்த சல்லிவன், 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு தனது குழந்தைகளுடன் தனது இறுதி நாட்ளைக் கழித்தார். 1855ம் ஆண்டு சனவரி 16ம் நாள் தனது 66ம் வயதில் அங்கேயே இறந்தார்.



கல்லறை

விடுதலை பெற்ற இந்தியாவில், சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் சூலை 14, 2009 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


A summary of Career of John Sullivan

1788 Born in London on 15 June.

1804 Writer, in Madras.

1805 Assistant to the Secretary, Revenue and Judicial Dept.

1806 Court Registrar, Chittaput, South Arcot District.

1807 Assistant to the Chief Secretary in the Secret, Political and Foreign Dept.

1809 Now 21 years old, he was Acting Asst. to the British Resident at Mysore.

1811-14 In England studying?

1814 Collector at Chingleput (Chengalpattu).

1815 Special Revenue Commissioner in Coimbatore.

1815-30 Permanent Collector of Coimbatore (including the Nilgiris).

1819 First two visits to the Nilgiri Hills; built cottage at Dimhatti.

1819-21Administrative work in Madras.

1820 Member, Board of Revenue; married Henrietta Cecilia Harington on 2 Feb.

1821 First visit to Ootacamund, Feb. 2; young son dies in Coimbatore in July.

1822 Started building ‘Stonehouse’ at Ootacamund.

1823-27 Mostly in Ootacamund with his family.

1828 Ootacamund made into a military cantonment, and thus taken from Sullivan’s control.

1830-35 On absentee allowance in England; on 9 Feb. 1832 appeared before a Select Committee of the House of Commons to give evidence on revenue matters.

1835-36 Resigned his appointment as Member of Council and was made Judge of the Faujdari Adalat and also Senior Member of the Board of Revenue. Being permitted to reside where he liked, he chose Ootacamund.

1836-41 President of the Revenue, Marine, and College boards.

1838 His wife Henrietta and eldest daughter Harriet died in Ootacamund; both buried in St. Stephen’s Church.

1839 Member of the Governor’s Council.

1841 Retired in May from the M.C.S., with an annuity from the Company’s fund; he had seven children to bring up.

1855 Died in England on 16 Jan., aged 66.

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு யாருடைய காலத்தியது?


புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் குடுமியான்மலை. இந்த ஊரில் உள்ள குன்றில் குடுமித்தேவர் என்ற பெயரில் உள்ள சிவபெருமானின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் அளிந்த நிவந்தங்களைப் பற்றிய கல்வெட்டுகள் குடுமித்தேவர் கோவிலிலும் அதை அடுத்துள்ள குடைவரைக் கோவிலிலும் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குடைவரைக்கோவிலில் காணப்படும் இசைக்கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் இருந்துவரும் இசை மரபினுடைய ஆழத்தைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. 

சிகாகிரீசுவரர்
திருநலகுன்றம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கோயில் இப்போது சிகாகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. (சிகா – குடுமி, குடுமியுள்ள சிவன்) இந்த பெயர் வந்ததற்கான காரணம் குறித்து ஒரு தல புராணம் உள்ளது. இங்குள்ள மேலக்கோயிலில் மலையின் கிழக்கு சரிவில் குடைவரை உள்ளது. இதற்கு தெற்கே உயர்ந்த பாறையில் புகழ் பெற்ற இசை கல்வெட்டொன்று உள்ளது. 

குகையினை மேலே 64 நாயன்மார்களின் சிற்ப தொகுதியும் உள்ளது. 8 ஆம் நூற்றண்டிலிருந்து இதன் வரலாற்று சான்றுகள் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. முகப்பு கோபுரத்தின் உள்ளே இரு புறங்களிலும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வாயிலின் வசந்த மண்டபத்தில் இரு புறத்தில் உள்ள தூண்களில் நாயக்கர் கால 24 சிலைகள் மிக அழகானதாக பிரம்மாண்டமாக கலையழகு மிக்கதாய் வியக்கதக்க வகையில் காட்சியளிக்கின்றன. 

நரசிம்மவதாரம், மன்மதன், ரதி, இராவணன், பனிரண்டு கைகளுடன் ஆறுமுகன், விநாயகர், வீரபத்ரர், குதிரைப்படை வீரர், காலட்படை வீரர், கருடன் மீதமர்ந்த திருமால் என காண்போரை வியக்க வைக்கும் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிக்கின்றன. வடித்த சிற்பியின் திறனை மெச்ச வைக்கின்றன. மேலும் இங்குள்ள 120 மேற்பட்ட கல்வெட்டுகள் பல வரலாற்று செய்திகளை தருகின்றன.

மகேந்திர பல்லவன்

அந்த இசைக் கல்வெட்டும் குடைவரையும் யார் காலத்தியது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான திரு. மீனாட்சி போன்றவர்கள் இது மகேந்திர பல்லவன் காலத்தியது என்றும் அவனால் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, இக்கல்வெட்டு பல்லவ கிரந்தத்தால் அமைந்துள்ளது, மகேந்திர பல்லவன் இசையில் தேர்ச்சி பெற்றவன், இக்கல்வெட்டின் அருகே பரிவாதினி என்ற யாழின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவன் மகேந்திரன் போன்றவை ஆகும்.

பாண்டியர்

ஆனால் பேராசிரியர் மகாலிங்கம், வெங்கையா ஆகியோர் இதிலிருந்து மாறுபடுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்ததிலிருந்து இவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக்கவே வேண்டியிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) குடைவரைக் கோவிலின் அமைப்பு, அதன் தூண்கள், துவாரபாலகர்கள் ஆகியவை அமைந்துள்ள முறை மகேந்திர பல்லவனின் குடைவரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. பாண்டியர் பாணிக் கட்டடக் கலையை அவை பெரும்பாலும் ஒத்திருக்கின்றன.

2) உதாரணத்திற்கு இசைக் கல்வெட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் சிலையைப் பார்ப்போம். வலது காலை ஊன்றி, இடது காலை மடித்து கையில் மோதகத்துடன் காணப்படும் இத்திருமேனியை போன்ற விநாயகர்களை பல பாண்டியர் குடைவரைகளில் காணலாம். ஆகவே இது பாண்டியர் பாணி என்பது ஊர்ஜிதமாகிறது.
 

குடுமியான் மலை விநாயகர்

திருமலாபுரம் குடைவரை

3) இந்தக் கோவிலில் பல்லவர் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மாறாகப் பாண்டியன் மாறன் சடையன், ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் போன்ற இடைக்காலப் பாண்டியர்களுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

4) மகேந்திரன் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களில் பலரும் இசை ஆர்வம் கொண்டவர்களே. உதாரணமாக வேள்விக்குடிச் செப்பேடுகள் பாண்டியன் நெடுஞ்சடையனை கீத கிந்நரன் என்று அழைக்கின்றன.

5) பரிவாதினி என்ற யாழ் மகேந்திரனால் மட்டும் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதும் சரியல்ல. காளிதாசனின் ரகுவம்சத்திலும், பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்திலும் பரிவாதினி என்ற யாழ் இடம்பெற்றுள்ளது.

6) இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு, மகேந்திரனை அவன் வென்றவுடன் காவிரியில் யானைகளால் பாலம் அமைத்து சோழ, பாண்டியர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறது. ஆகவே காவிரி ஆறே மகேந்திரனின் தெற்கெல்லையாக இருந்ததை இது தெளிவாக்குகிறது. குடுமியான்மலை, திருமெய்யம் போன்ற இடங்களில் பாண்டியர்களின் குடைவரைகள் பெரும்பாலும் காணப்படுவது இதற்கு ஆதரவு சேர்க்கிறது.

அப்படியானால், இந்தக் கல்வெட்டு யாருடையது என்ற கேள்வி எழுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதியில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம் இதை ஓரளவு தெளிவுபடுத்துகிறது.

"ருத்ராச்சர்ய சிஷ்யேண பரம மாஹேஸ்வரேண ரா(க்ஞா) சிஷ்ய ஹிதார்த்தம் க்ருதா ஸ்வராகமா"

அதாவது ருத்ராச்சார்யரின் சீடனும் பரம மாஹேஸ்வரனுமான அரசன் ஒருவன், மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்த இசைக் கல்வெட்டை வடித்தான் என்கிறது இந்த வரிகள். மகேந்திர பல்லவன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினாலும், அவன் மாஹேஸ்வர சைவத்தைப் பின்பற்றியதற்கான சான்று இல்லை. அதன் பிரிவான கபாலிகத்தை அவன் மத்த விலாசப் பிரகசனத்தில் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். ஆகவே மாஹேஸ்வரர்கள் என்று கூறப்படும் பாசுபத சைவப் பிரிவைச் சேர்ந்த மன்னன் ஒருவனே இதை வடித்திருக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் பலர் பாசுபத சைவத்தை போற்றினார்கள் என்பது தெளிவு. மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் குடைவரையில் பாசுபதத்தைத் தோற்றுவித்த லகுலீசர் சிற்பம் அமைத்திருப்பது தெரிந்த விஷயம்.

பாண்டிய மன்னன்

ஆகவே பாண்டிய மன்னன் ஒருவனால் இந்தக் கல்வெட்டு ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும். பராந்தக நெடுஞ்சடையன் தன்னை 'பரம வைஷ்ணவன்' என்று சீவரமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக் கொள்கிறான். அவன் பெயரானான முதலாம் வரகுண பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். பல சிவன் கோவில்களுக்குத் திருப்பணி செய்தவன். மாறன் சடையன் என்ற பெயரில் அவனுடைய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டு அவனால் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் கல்வெட்டுகள் இங்கே இருந்தாலும் அவன் வைணவ நெறியைப் பின்பற்றியவன். பெரியாழ்வாரின் சீடன். ஆகவே இங்கே பரம மாஹேஸ்வரன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வது மாறன் சடையானான வரகுண பாண்டியன் என்றே முடிவு செய்யலாம். இதிலிருந்து இக்கல்வெட்டு பொயு 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது.

புகைப்படங்கள் 



குடுமியான் மலை 







இசைக்கல்வெட்டு 











புதன், 25 ஆகஸ்ட், 2021

வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்

 வெண்ணிப்போர்  -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர் 

வெண்ணியில் நடைபெற்ற போரில் சோழன்  கரிகாலன் பெருவளத்தானும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு தமது வீரத்தைப் பறைசாற்றி இருந்துள்ளனர். இதில் வீரமும், மானமும் புகழ் பெற்று நின்றன என்பர். 

இதில் போரில் தோல்வியுற்றப் பின்னர் சேர நாடு ஒளி இழந்தது என்று சங்ககாலப் புலவர் பெருமக்கள் கூறுகின்றனர்.  

கழாத்தலையார் என்ற சங்ககாலப் புலவர் புறநானுற்று வரிகளில்,

"மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, 
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழாவும் 
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் 
வாள் வடக்கிருந்தனன்" (புறம் 65) 

விளக்கம்: முரசு முழங்கவில்லை, யாழ் இசையை மறந்து. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர்கள் உழுதலைத்தவிர்த்தனர். ஊர்புற வேலிகள் விழா ஏதுமின்றி கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. 

என்று சேர நாட்டில் உள்ள சோர்வான நிலையை எடுத்து இயம்புகிறார். 

அதே சமயத்தில் களத்தில் வெற்றி அடைந்த கரிகாலனைப் பாடிய வெண்ணிக்களத்துக்குரிய வெண்ணியக்குயத்தியார் என்ற பெண்பாற்புலவர், சேரனின் மானத்தைப் பற்றியும் பெருமிதமாகவும் புறநானுற்றில் பாடுகிறார். 

"நளி இரு  முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற 
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை 
மிகப் புகழ் உலக மெய்திப் 
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே (புறம்  66) 

கரிகாலன் வெற்றியால் புகழ் அடைந்தானாம்; சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம், என்று ஒருவனது வீரத்தின் புகழ்! அடுத்தவனது மானத்தின் புகழ்! எது நல்லது? பின்னது அல்லவா? என்று கேட்கும் வெண்ணிக்குயத்தியார் வீரத்தை விட மானமே பெரிது என்று நமக்கு உணர்த்துகிறார்.

சேரன் வீரம், மானம் நாடி மாளத் துணிந்த பெருமித நிலை ஆகிய செய்திகள் தமிழகம் எங்கும் பரவின. அப்பெருஞ் சேரனைக் காணும் ஆர்வம் புலவர் பெருமக்கள் மத்தியில் எழுந்தது. சேரலாதனுடன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நோக்கில் அவனை நோக்கிப் பயணித்தனர். 

"கரிகால் வளவனோடு வெண்ணிப் பறந்தலைப் 
பொறுத்து புண் நாணிய சேரலாதன் 
அழிகள  மருங்கின் வாள் வடக்கிருந்தன 
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் 
அரும் பெற லுலகத் தவனோடு செலீ இயர் 
பெரும் பிறிதாகி யாங்கு" (அகம் 55)


என்று மாமூலனார் என்ற புலவர் நமக்கு எடுத்து உரைத்துள்ளார். 

தோண்டத்தோண்ட வெளிவரும் தமிழர் நாகரிகம்

தமிழக அளவில் தொல்லியல் துறை கீழ்க்கண்ட இடங்களில் அகழ்வாராழ்ச்சி நடைபெற்றால் மேலும் தமிழரின் தொன்மை நாகரிகங்கள் வெளிப்படும்.

கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண்மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி.

இங்கிலாந்து தொல்லியல் அறிஞர் துப் ரெய்ஸ்  போன்ற ஒரு சில வெள்ளையர்கள் இந்த இடங்களில் அகழ்வாராழ்ச்சி செய்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கூறி உள்ளனர். 

தமிழகத்தை மூவேந்தர் மட்டுமன்றி பல்லவர், களப்பிரர், என ஏராளமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அம்மன்னர்களைப் பற்றிய வரலாறு, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றி தொல்லியல் சான்றுகள் நமக்கு புதுப்புது தகவல்களைத் தருகின்றன. அப்படி தமிழகத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இடங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்கள் இங்கே.



கரூர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கிரேக்க, ரோம, அரேபிய, சீன வியாபாரிகள் அதிக அளவில் வந்து சென்ற பிரசித்தி பெற்ற வர்த்தக மையம்.

ஆதிபுரம், கருவூர் வஞ்சி, கருவைப்பதி, வஞ்சுலாரண்யம், கர்பபுரம், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், ஷண்மங்கல ஷேத்திரம், வஞ்சிமூதூர் என, கரூருக்குத்தான் எத்தனை பெயர்கள்! தமிழகம் தாண்டி, கிரேக்க அறிஞர்கள் இவ்வூரைக் 'கேரூரா' என்றும், ஆங்கிலேயர்கள் 'கேரூர்' என்றும் அழைத்தனர்.



ஆன்பொருனை என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்நகரம். பெருங் கற்காலத்தைச் சேர்ந்த ஈமக்குழிகள், மண்பாண்டங்கள், ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழகத் தொல்லியல் துறை, 1973- ---74, 1977 --79, 1996இல் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டது. இதன் விளைவாக, ஏகப்பட்ட ரோம நாணயங்கள், செப்புக் காசுகள், வாசனைப் பொருட்கள் நிரம்பிய சட்டிகள், மணிமாலைகள், ஒயிலான ஆண், பெண் உருவங்கள் கொண்ட தங்க மோதிரமும் கிடைத்தன.

கொடுமணல்
ஈரோடு, பெருந்துறைக்கு அருகே, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கொடுமணல். பண்டைய காலப்பெயர் கொடுமணம். 1999, -2000 ஆம்
ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது. ரோம நாணயங்கள்; கிளிஞ்சல்கள், கண்ணாடி வளையல்கள், நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சங்குகள்; மான் கொம்புகள், செப்புக் காசுகள் கிடைத்தன.

இவைதவிர, 'பாண்டியர் வீடு,' அல்லது 'பாண்டியர் குழி' என அழைக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (burial sites) கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெருங் கற்காலத்தைச் (megalithic) சேர்ந்தவை.

முற்காலத்தில், மணிகளுக்கும், அணிகலன்களுக்கும் இப்பகுதி புகழ் பெற்றிருந்ததால், கோமேதகம் (beryl), படிகக் கல் (quartz), இரத்தினம் (agate) ஆகியவை கொண்ட நீண்ட மணிமாலைகள் அதிகம் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு, ஒரு ஈமக்குழியில் 700 மணி மாலைகள் கிடைத்தனவாம்!

மரக்காணம்
மரக்காணம் என்னும் ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகில் உள்ளது. சிறுபாணாற்றுப் படை நூலில், இவ்வூர் 'எயிற்பட்டினம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எயில் என்றால் மதில் (Wall) என்று பொருள். 'மதிலொடு பெரியபட்டினம்' - மதிலைக் கொண்ட கடற்கரைப்பட்டினம் என்பதே பொருள்.

மணற்கானம் (மணற்காடு) என்ற சொல்லே பிற்காலத்தில் மரக்காணமாகத் திரிந்தது என, அறிஞர் இராசா மாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

இவ்வூரில் உள்ள பூமீஸ்வரர் கோவிலுக்கு அருகில் 2005 , 2009 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில் சுடுமண் குழாய், சொரசொரப்பான சுடுமண் பானை ஓடுகள் கிடைத்தன.


விஜயநகர அரசர்கள் காலத்திய செப்புக் காசுகள், சுடுமண் கெண்டிகள் (குறுகலான வாய் கொண்ட மண் குவளைகள்), சுடுமண் புகைப்பான்கள், இரும்புப் பொருட்கள், பீங்கான் ஓடுகள், செம்பு வளையம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

மாங்குடி
2002ஆம் ஆண்டு, தமிழகத் தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. சிறிய கற்காலத்தில் பயன்படுத்திய சிறிய, பெரிய ஆயுதங்கள், மண்பாண்ட மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

4, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க ரோம நாணயங்கள்; பிற்காலச் சோழ, பாண்டிய வம்சத்தைச் சார்ந்த சிற்பங்கள், 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ், கிரந்த கல்வெட்டு ஒன்று, இப்பகுதியில் பாண்டியப் படை ஒன்று இருந்ததாகக் கூறுகிறது. இம்மாதிரி சிறிய சேனைகள் பெருவழிகளில் நிற்பதும், அவற்றைச் சேர்ந்த வீரர், குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அருகிலேயே அமைந்திருப்பதும் வழக்கம். அவ்வாறு மாங்குடியின் அருகே ஒரு படை இயங்கியதும் கண்டறியப்பட்டது.

16--17ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர்களும், தென்காசியைச் சேர்ந்த பாண்டிய வம்ச வழித்தோன்றல்கள், பின்னாளில் ஆங்கிலேயரும் இப்பகுதியை ஆட்சிசெய்ய, இவற்றின் சான்றாகக் காசுகளும் கண்டெடுக்கப்பட்டன.



பட்டரைப்பெரும்புதூர்
பட்டரைப் பெரும்புதூர் திருவள்ளூருக்குச் சற்று மேற்கே, கொற்றலையாற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. 2016இல் இங்கே அகழாய்வு நடந்தது.
மண்ணால் ஆன 23 உறைகளுடன் கூடிய உறை கிணறு, விதவிதமான உருவங்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், கோடரி, வளையல் துண்டுகள், கண்ணாடி, கிளிஞ்சல் நகைகள், முத்துமணிகள், கனிமத்தால் ஆன கூரை ஓடுகள் என, மனித வரலாற்றுக்கும் முற்பட்ட காலகட்டத்திலிருந்து ஏகப்பட்ட சான்றுகள் கிடைத்தன.

நறுமணப் புகைக்காக பயன்டுத்தப்பட்ட மட்கலன், இருபக்க முனையுடைய கல்லால் உருவான கத்திகள், கற்கால கோடரிகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், யானை தந்தத்தினாலான கழுத்தில் அணியும் பதக்கம் போன்ற ஆபரணங்களும் கிடைத்துள்ளன.

பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்று தொடக்க காலம் என, ஐந்து காலங்களுக்கான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்திருப்பது இந்தப் பகுதிகளில்தான்.

அழகன்குளம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள ஊர். தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பானை ஓடுகள், ரெளலட்டட், ஆம்போரா பானை ஓடுகள் கிடைத்தன. தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த ஓடுகள் கி.பி. ௧௦௦ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.

துளையுடன் கூடிய ஓடுகள், செங்கற்கள், மணிகள், ரோமானியக் காசுகளும் கிடைத்தன. காசுகளில் முன்புறம் ரோமப் பேரரசரின் தலைப் பகுதியும் பின்புறம் வெற்றி தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன.


சதுர வடிவிலான பாண்டியர் காசுகளும் கிடைத்தன. வடநாட்டு பானை ஓடுகளும் கிடைத்துள்ளதால் வட இந்தியாவின் கங்கை நதி பகுதிக்கும் அழகன் குளத்துக்கும் கிடையே பண்டைக் காலத்தில் வர்த்தகத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

நியூ கலிடோனியத் தமிழர்கள்..

நியூ கலிடோனியத் தமிழர்கள்..
*************************************************
நியூ கலிடோனியா என்ற தீவு, ஆஸ்திரேலியா அருகில் உள்ளது. இந்தத் தீவில் 
 இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர்.
வேலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்
-------------------------------------------------------------------
நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது.
அழுகையில் தமிழ்ப்பாடல்..
---------------------------------------------------
ஆகஸ்டு 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்களது மொழியில் பேசினர் என்பதையும் தங்கள் தாய்நாடு குறித்து பாடி அழுதனர் என்றும் நினைவு கூர்ந்தனர். 

தமிழ்ப்பெயர்கள்

அவர்களது பழங்குடிமையை அறிய அவர்களது இந்திய வழியான குடும்பப் பெயர்களே துணையாக இருந்தன: பவழக்கொடி, மாரிசாமி, இராயப்பன், சாமிநாதன், திவி, வீராசாமி என்பன.
திரைகடலோடி..
-------------------------------

தமிழர்கள், பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால் போன்றப் பகுதிகளில் இருந்து, மொரிசியஸ், ரீ-யூனியன் சென்று, பின்னர் அங்கிருந்து நியூ கலிடோனியா சென்றனராம்.

The first is recorded as Mamouth Cassem in the original log, whose real name was probably Mahmud Qāsim, born in Pondicherry about 1755. The second is listed as a Bengali named Nasrin, aged about sixteen or seventeen years, on the muster roll. Given their names, it can be assumed that both were Muslims. Both are recorded as dying in Peru on 14 April 1770, where the ship sailed after leaving Aotearoa under duress.





பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் ‘இடறல்’ அணுகுமுறை – புறநானூற்றுப் பாட்டு சாத்தனார் கூறும் வரிகள்

  இயலாமையைக் குறிப்பிட்டு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எழுதிய புறநானூற்றுப் பாட்டு ( 28) உயிரினப் பிறப்பில் எட்டு வகையான பேரச்சம் உண்டு. மூக...