செவ்வாய், 25 நவம்பர், 2014

டத்தோ பீட்டர் வேலப்பன். 

இவர் ஒரு மலேசியா நாட்டை சார்ந்த தமிழர். இவர் தம்கடும் முயற்சியால் கிடைத்த 'ஆசிய காற்பந்தின் திருவாளர்' (Mr. Asian football award) விருது கிடைக்கப்பெற்றவர்.

சிறு வயதுகளில், மலேசியா நெகிரி செம்பிலான் ரப்பர் தோட்டங்களில் உழன்று, 12 வயது வரை தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்தும், நம்பிக்கையுடன் தளராது முயன்று, கல்வியாளராகவும், பின் மலேசிய காற்பந்துக் குழு விளையாட்டாளராக, நிர்வாகியாக, பயிற்றுவிப்பாளராகவும் இருந்த டத்தோ பீட்டர் வேலப்பன் தனது நினைவுகளை 'கனவுகளுக்கு அப்பால்' என்ற புத்தகத்தை சிங்கப்பூரில் வெளியிட்டார்.

இவர் 1935 ஆம் ஆண்டு பிறந்து, பின்னர் பிர்மிங்ஹம் பல்கலைக் கழகத்தில் பயின்று, அதன் கனடாவில் மக்கில் பல்கலைக் கழகத்தில் பயின்றும் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் செரம்பான் நெகிரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, ஆசிய காற்பந்து கழகத்தின் சேர்ந்து, 1963-1980 வரை துணை இயக்குனராக மலேசியா காற்பந்து கூட்டமைப்பில் (Football Association of Malaysia) பணியாற்றினார். இவர் பணியாற்றிக் காலத்தில் தன் அனுபவத்தைக் கொண்டு மலேசிய காற்பந்தை மேம்பட்ட அணியாக மாற்றியமைத்தார். பின்னர் 1972 ஆம் ஆண்டு 'முனிச்' நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் போது மலேசிய காற்பந்துக் குழுவிற்கு மேலாளர் (Team Manager) மற்றும் பயிற்றுவிப்பாளர் (Coach) ஆக பணியாற்றினார். 

அதன் பின்னர் 1978ஆம் ஆண்டு பொது செயலாளராக (General Secretary of  Asian Football Confederation) ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் அமைப்புக்கு நியமிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற FIFA உலக காற்பந்து போட்டியின் போது, ஒருங்கிணைப்பு கூட்டு  இயக்குனராக (Coordination Director) பதவி வகித்தார்.

2007 ஆம் ஆண்டு ஒய்வு பெற்று உள்ளார். இருப்பினும் Vision Asia என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார்.

உழைப்பின் வாரா உறுதியும் உளவோ?

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

காஞ்சி கைலாயநாதர் கோவில்..


காஞ்சி கைலாயநாதர் கோவில்..

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், இந்தப் பரிணாம வளர்ச்சியின் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பொ.ஊ. 700ஆம் ஆண்டளவில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் (நரசிம்மவர்மன் II) இதை கட்டத் தொடங்கினார். கல்வெட்டுகளில் இது ‘இராஜசிம்மேச்சரம்’ என அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தின் மிகப் பழமையான கற்கோயில்களில் இதுவும் ஒன்று.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதன்முதலாக அறிமுகமான கட்டுமானக் கோயில் தொழில்நுட்பத்தை, இராஜசிம்மன் கைலாசநாதர் கோயிலில் மேலும் மேம்படுத்தினார். பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோயிலின் பின், முழுமையான கல் கட்டிடக்கலையின் அழகிய வடிவம் கைலாசநாதர் கோயிலில் வெளிப்பட்டது. சிற்பக்கலையின் நுணுக்கமும், கட்டிட வடிவமைப்பின் ஒழுங்கும், பல்லவர் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.

இராஜசிம்மன் தன் மகன் மகேந்திரவர்மனையும், தன் பட்டத்தரசி ரங்கபதாகையையும் இந்தக் கட்டிடப்பணியில் ஈடுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.






இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

விருப்பாஷா கோவில் கர்நாடகா 


விருப்பாஷா கோவில் கர்நாடகா 



விருப்பாஷா கோவில் கர்நாடகா 



தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். 

இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.





கட்டிட அமைப்பு

தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும்.

இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.

பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம்.

பல்லவர் கால ஓவியங்கள்

பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை 'இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி.1931 இல் கண்டுபிடித்தார்.

துணைக் கோயில்கள் – சிற்பக்கலையின் சிறு உலகம்

பிரதான கோயிலைச் சுற்றி 58 சிறு துணைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனி சிறு விமானங்களைக் கொண்டுள்ளன.

  • வாயிலில் உள்ள கோயில் இராஜசிம்மனின் பட்டத்தரசி ரங்கபதாகை கட்டியதாகும்.

  • ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகள், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகள் காணப்படுகின்றன.

  • கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் கட்டிய மகேந்திரவர்மேச்வரகிரகம் உள்ளது.

 

“புனர்ஜனனி”

கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்க வடிவில் உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று “புனர்ஜனனி” என அழைக்கப்படுகிறது.

உள் மற்றும் வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், தரையில் படுத்தபடி ஊர்ந்து சென்று மீண்டும் வெளிவர வேண்டும். இது பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் ஆன்மீக அனுபவத்தை குறிக்கிறது.

பல்லவர் கால ஓவியங்கள் 

பிரதான கோயிலும் துணைக் கோயில்களிலும் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான ஓவியங்களில் ஒன்று:

  • சிவனும் பார்வதியும் நடுவில் கந்தருடன் காணப்படும் காட்சி.

விஜயநகர காலத்தில் (குமார கம்பணர் காலம்) இவ்வோவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம். இதனால் இவை “இரு அடுக்கு ஓவியங்கள்” என அழைக்கப்படுகின்றன.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தொல்காப்பியம் வகுத்த 'சிறுபொழுது' 'பெரும்பொழுது'


ஐந்தமிழ்

படித்தலும் உரைத்தலும் இயற்றமிழாகும்!
பாடி பரவசம் கொள்வது இசைத்தமிழாகும் !
நடித்து ஆடுவது நாடகத் தமிழாம்!
ஆய்வுகள், கல்வி அறிவியல் தமிழாம் -இவை
யாவும் கணினியில் வந்தால் கணினித் தமிழாம்!

புதன், 3 செப்டம்பர், 2014

தொல்காப்பியப் பூங்கா - பொழுது



தொல்காப்பியம் முதல் பொருளுக்கு இலக்கணம் கூறும் போது, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என்று சொல்லி காரணம், உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்கிறது.



இதில் நிலம் என்பது,திணைகளாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு கூறுகிறது:

1) குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
2) முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
3) மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
5) பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்


தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள

பிறகு 'பொழுது' பற்றி பார்க்கும் போது, அது சிறு பொழுது, பெரும் பொழுது என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

(1) சிறு பொழுது வகைகளைப் பார்க்கும் போது,

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும்.
சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை- விடியற்காலம்
காலை - காலை நேரம்
நண்பகல்- உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்


சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

(2)பெரும்பொழுது பற்றி கூறும் போது,


பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி- இளவேனில் காலம்
ஆனி, ஆடி- முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி- கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி- பின்பனிக் காலம்


சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.




செவ்வாய், 2 செப்டம்பர், 2014

காகிதக் கூழ் மற்றும் காகித தாள் தயாரிப்பு.

காகிதக் கூழ் என்பது நம் நாட்டில் கரும்புச் சக்கையில் (60-70%) இருந்தும், யூக்ளபிட்ஸ் (40-30)% மரத்தில் இருந்தும் கொதிகலனில் அமிலங்களுடன் (white liquid) கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் ப்ளேனட் செஸ்ட் எனப்படும் கலவைத் தொட்டியில் வேதியியல் பொருட்களுடன் கலந்து, பின்னர் மெசின் செஸ்ட் தேக்கி வைத்து இவை பேப்பர் மெசின் பகுதிக்கு அனுப்பப் படுகிறது.

பின்னர் இவை சுத்தப் படுத்தப் பட்டு, மீண்டும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப் பட்டு ரோலர், சிலோ, உலர்ப்பான் மூலம் நீர்த்தன்மை நீக்கி, காலேண்டர் மூலம் இதன் திண்மை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டிய காகிதம் உற்பத்தி செய்யப் படுகிறது.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: உலக சுகாதார நிறுவனம்..

ஒருமுறை பாரிஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில், பயணிகள் இருக்கையில் இரு பயணிகள் இந்த இ-சிகரெட் பிடித்துக் கொண்டு வந்தனர்.
திடுக்கிட்டுப் போனேன். விமானத்திலேயே மறைத்து பிடித்தனர்.

சொல்லலாமா என்று பார்த்தேன்.

பின்னர் நமக்கு ஏன் வம்பு என்று வாய் மூடி இருந்து விட்டேன்.

இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன?

இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும்.
அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்கும்.


இதில், சில இ-சிகரெட்டுக்களில் உண்மையான சிகரெட்டின் முனையில் இருக்கும் நெருப்பு கங்கு கனன்றுகொண்டிருப்பது போன்ற தோற்றமும், புகை வெளியேறுவதைப்போல வெண்ணிற நீராவி வரும் வசதியும் கூட செய்யப்பட்டிருக்குமாம். அந்த வகைப் போன்றது போல இவைகள்.

இதனால் தீ விபத்து என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த வகை, இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்குமாம். இன்றைக்கு இதுவும் ஒரு வகை ஆடம்பரமாக ஆகிவிட, இதற்கும் உலக சுகாதார நிறுவனம் தடை போட்டு விட்டது.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

“அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து (Van) நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது.

அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார்.
மஞ்சள் கல் மோதிரம்..
நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன்.
என் விரலில்புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன்.

பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம், மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார்.

என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை?" என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார்.
“இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன்.
“எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார்,


“போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால் உட்கார்ந்திருந்த மணியம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பலமாய்ச் சிரித்தார். ஏனென்றால் அந்த வாக்கியத்தை அடிக்கடிப் பயன்படுத்துபவர் அய்யாதாம்.
வேறு பல பொருள்களும் உண்டு!
பச்சைக் கல் மோதிரம் பற்றி...
இது தான் சரியான சமயம் என்று பெரியாரிடம் கேட்டனர்.
அது வண்டிக்குள் எப்போதும் இருக்கும். பலரின் சந்தேகமும் கூட, ஆம்! பெரியாரின் பச்சைக் கல் மோதிரம் பற்றியச் சந்தேகம்தான். அய்யாவிடம் கேடகப் பலருக்கும் பயம்.
பெரியார் தம் மோதிரததை ஒரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டார். “அதுவா” என்றார்.
கொஞ்சம் சகஜ நிலையில் இருக்கின்றார் என்று கண்டு கொண்ட நண்பர் தென்பாதி பெரியசாமி (கலைஞரின் புகைப்படக் கலைஞர் சிங்காரத்தின் தம்பி மாமனார்) மோதிரம் பற்றிப் பலரும் எழுப்பும் சந்தேகங்களை மெல்லக் கூறினார்.

“அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார். யாரும் ஏதும் சொல்லவில்லை பெரியாரே மீண்டும் பேசினார். “எங்க கோயமுத்தூர் ஜில்லாவுல வெள்ளக் கோவில்லே ஒருசெட்டியார் 'மஞ்ச' நோட்டீசு குடுத்திட்டார்…(இன்சால்வென்சி).
அவரோடு சொத்தெல்லாம் ஏலம் போச்சு.. நானும் போயிருந்தேன். அப்ப தங்கள்ம் ஒரு பவுன் பதின்மூன்று ரூபாய்!(ரூ.13).

அப்ப இந்தப் பச்சைக் கல்லும் ஏலத்துக்கு வந்தது. 216 ரூபாய்தான்..
இந்தப் பச்சைக் கல் மோதிரம் போட்டப்புறம் தான்செட்டியார் திவாலாயிட்டார் என்று யாரும் ஏலம் கேட்கலே. சர்க்கார் மதிப்பு அப்போ இருநூற்றுப் பதினைஞ்சு ரூபாய். நான் ஒரு ரூபாய் கூட்கொடுத்து இருநூற்றிப் பதினாறுக்கு வாங்கினேன். பலபேரு இதபை போட வேண்டாம். செட்டியாரைத் திவாக்கின கல்லுன்னாங்க. நான் என்னதான் ஆகுதுன்னு பாப்போமேன்னு மோதிரமாக்க் கட்டிப்போட்டேன்…. எங்க வீட்டில் சில பேருக்குத் திவால் பயம்.. நடந்தத்து என்ன தெரியுமா? எனக்குப் பணம் குவியுது… குவியுது.. என்ன பணறதுன்னே தெரியலே.. குவியுது..” என்றார், சிறுபிள்ளை போல் கைகளை தட்டிக்கொண்டே..

(திருச்சி செல்வேந்திரன் அவர்களின் பதிவிலிருந்து)

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

இந்தத் தீவு தென் அமேரிக்கா நாட்டின் மேற்புறத்தில் கரிபியன் கடலில் அமைந்துள்ளது.இதன் மொத்த மக்கள் தொகையில் 440,000 பேரில் சுமார் 55,000 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

இவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தீவுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர் வாழ்கின்ற தீவு இதுவாகும்.

கி.பி. 1861 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களாக ஆங்கிலேய அரசாலும் பின்னர் பிரெஞ்சு அரசாலும் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டுவரப் பட்டனர்.
பின்னர் இது தொழிலாளர் சட்ட விதியால் 1883 ஆம் ஆண்டு தொழிலாளர்களைக் கொண்டு வரும் தடை சட்டத்தால் நிறுத்தப்பட்டது.

1923 ஆம் ஆண்டில் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை தரப்பட்டது.
தற்போது சில தமிழர்களே தமிழ் மொழியைப் பேசுகின்றனர்.ஆனால், பெயர்கள் மட்டும் தமிழ்ப் பெயர்கள் வைத்துள்ளனர்.இந்துக் கோயில்கள் அதிகம் உள்ளன.

அனைத்தும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைப்படி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

 

எர்னெஸ்ட் முத்துசாமி (Ernest Moutoussamy) என்பவர் தாம் துணை நிலை ஆளுநராக உள்ளார். இவர் மூதாதையர் தமிழ் நாடு அல்லது பாண்டிச்சேரியை சார்ந்தவராம்.



 

மார்டின்கு (Martinique) தீவு.

மார்டினிகு தீவில் தமிழர் மார்டினிகு (Martinique)என்று ஒரு சிறிய தீவு தென் அமெரிக்காவின் மேல் கிழக்கு கரிபியன் கடலில் அமைந்துள்ளது.

மலைகளால் சூழப்பட்டு உள்ள இந்த குட்டித் தீவு 1102 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது.
இவர்கள் பிரெஞ்சு அரசால் 1851 ஆம் ஆண்டுகளில், சென்னை, பாண்டிச்சேரி, மற்றும் காரைக்கால், வங்காளத்தில் உள்ள சந்தேன்நகர் என்ற ஊர்களில் இருந்து கொண்டு செல்லப் பட்டு இந்த தீவில் குடி அமர்த்தப் பட்டனர்.மொத்தம் மக்கள் தொகை 43,600. இந்தத் தீவில் தற்போது 5-10% மக்கள் தமிழ் மக்களாக உள்ளனர். இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் சுதந்திரப் போராட்ட வீரன் பண்டார வன்னியன்



இலங்கையில் வன்னி அரசு..

இலங்கையில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் வன்னியர்கள்.
வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், கிழக்கே திருகோணமலை மாவட்டத்தையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும்,
தெற்கே அருவி ஆற்றையும் எல்லையாகக் கொண்ட பகுதியை இவர்கள் ஆட்சி புரிந்தனர்.
இவர்களுடைய வீரத்தைக் கண்டு போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் அஞ்சினர்.
ஆங்கிலேயருக்கு அதிகத் தொல்லைக் கொடுத்தவர்கள் பண்டார வன்னியன்.

வன்னி நாட்டை அன்னியர் அடிமைப்படுதவிடாது அஞ்சாது போரிட்டவர் பண்டார வன்னியன்.
ஈழத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்து ஆங்கிலேயரை ஈழத்து மண்ணிலிருந்து
அகற்ற வேண்டுமெனச் சபதம் செய்து இறுதி மூச்சு வரை போரிட்ட வன்னி நாட்டின் கடைசி மன்னன் பண்டார வன்னியன்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..







































தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.  அறம் என்றால் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஓர் அரிய விளக்கம் கூறுகிறது.


1) அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில். (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை: 228 - 230)

 2) கள்ளுண்ணாமை,  கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்திச் செயலுக்கேற்ப நமக்கு சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று உணர்த்தும் பகுதி இது.   மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். (ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90)

3) இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது, இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது. (சிறைசெய் காதை: 135 - 138)

4) பிறவி,  துன்பம் என்பதையும் அத்துன்பத்தை அடையாமலிருக்கப் பிறவாமை எய்தவேண்டும் என்பதையும் மணிமேகலை கூறுகிறாள்.   பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம்.
(ஊர் அலர் உரைத்த காதை: 64 - 65) 

5) உதயகுமரனின் சாவில் வருந்தும் அவள் தாயிடம் மணிமேகலை,  ஆறுதல் கூறுவதாக வரும் பகுதியில் உயிர் என்பது வேறு ஒரு பிறவியில் வேறு உருவெடுக்கும். அதனால் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.   உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். (சிறைவிடு காதை, 73 - 79)

6) இன்னோர் இடத்தில்,  பசிப்பிணியின் கொடுமையும் அதைத் தீர்ப்பதன் நன்மையும் எடுத்துரைக்கப்படுகின்றன.   பசியின் கொடுமையைக் கூறுகையில்,  ‘அது நல்லகுடியில் பிறந்து பெற்றிருக்கும் நல்ல தன்மைகளை அழித்துவிடும்; நம் பெருமைகள், கல்வியறிவு, நாணம், தோற்றம் அனைத்தையும் கெடுக்கும்; இல்லத் துணைவியோடு தெருவில் நிற்கச்செய்யும் என்று உணர்த்துகிறது மணிமேகலை.   குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. (பாத்திரம் பெற்ற காதை: 76 - 80, 95 - 96) 
 
பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு, பரத்தமை ஒழிப்பு, கொலைகளவு ஒழிப்பு எனப் பல சீர்திருத்தங்களை இக்காப்பியம் பேசுகிறது.  அமுத சுரபி என்ற பாத்திரக் கற்பனை பசியொழிப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறப்பால் பெருமையில்லை, செய்கையால்தான் பெருமையுண்டு என இக்காப்பியம் நிறுவுகிறது. பிற சமயங்களின் கொள்கைகளையும் எடுத்துக்காட்டிப் புத்தசமயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருப்பது இலக்கியத்தைக் கொள்கை பரப்பும் கருவியாக ஆக்கியிருக்கும் முக்கியமான மாற்றத்தை உணர்த்துகிறது. ஊன்துவை அடிசில் உண்டு பழங்கள்ளை மாறிமாறி அரசனும் குடிகளும் மாந்துவதைப் பெருமையாக விதந்து பேசும் சங்க இலக்கியத்தடம் மாறிப் புலால் மறுத்தலையும் கள்ளுண்ணாமையையும் மணிமேகலை வற்புறுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றமெனலாம்.

 உலகில் மரணதண்டனையே கூடாது என்று சொல்லி வரும் இன்றைய நிலையில், தமிழ்ப் பெருங்காப்பியத்தில் ஒன்றான மணிமேகலை சிறை ஒழிப்பு பற்றி கூறுகிறது. சிறையே இருக்கக் கூடாதாம்.

சிறை ஒழிப்பு பற்றி உலகில் எந்த நாட்டிலாவது எந்த நீதி நூலாவது கூறி இருக்கிறதா?

சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்

  சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...