டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்கின்ற யமுனா (31 March 1865 – 26 February 1887)

மும்பை கல்யாண் நகரில் பிறந்த இவரின் கதை.

"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஒரே கண்டிஷன். அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில், "இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க. பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்கிறாள். "சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம். பின்னாடி பாத்துக்கலாம்" என்று சமாதானம் சொல்கிறான் அவளின் கணவன்.



பெண்கல்வி

கல்யாணமும் ஆகி விடுகிறது. பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க, அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து, இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.

கணவனுடன் சேர்ந்து வாழும் ஆசையில் அம்மாவிற்கு தெரியாமல் ரகசியமாய் படிக்கிறாள். அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அவள் வயதுக்கே வந்து விடுகிறாள்.

இனி இந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்க முடியாது, நீங்கள் கூட்டிக்கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய படுத்தி யமுனாவை கோபாலுடன் அனுப்பி வைக்கிறார்கள்.

முதல் இரவு அறைக்குள் இருவரையும் தள்ளி தாளிட்டு, இந்த கிறுக்கனை நம்ப முடியாது என்று கதவில் காதை வைத்து உள்ளே எதாவது நடக்கிறதா என்று ஒட்டு கேட்க ஆரம்பிக்கிறாள் யமுனாவின் அம்மா.

அதை அறிந்த கோபால் கட்டிலை தன் கையை வைத்து ஆட்டியபடி, " நீ படித்த 10 ஆம் பெருக்கல் டேபிளை சொல்லு " என்று பள்ளி அறையை பரிட்சை அறை ஆக்குகிறான்.

அவள் முப்பதாவது டேபிளையே அனாசயமாக சொல்லிவிட்டு, "கட்டிலை ஆட்டாமலே கேட்கலாம்ல" என்று அப்பாவியாய் கேட்பவளை ஆனந்தமாய் பார்த்து, "இன்று முதல் உன் பெயர் கரைக்குள் அடங்கும் யமுனா அல்ல. கரையில்லா *ஆனந்தி* " என்கிறான்.

*பள்ளி அறையில் கல்வி* 

தினமும் இரவு பள்ளி அறையில் இவன் பாடம் சொல்லி கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாய் கற்கிறாள். காலை முதல் வீட்டு வேலை செய்து களைப்பாக இருப்பதாக சொல்லி படிக்க முடியாது என்று அடம் பிடித்து தூங்க ஆரம்பிக்கிறாள்.

மறுநாள் எழுந்து பார்த்தால் அவனே சமையல் வேலையை முடித்து வைத்து "இப்போ என்ன செய்வ?" என்பதை போல் பார்த்து விட்டு வேலைக்கு செல்கிறான். இரவு வந்த பொழுது அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கோபமாகி, எழுப்பி அறைய போகும் பொழுது தடுத்து கர்ப்பமாய் இருப்பதாக சொல்லிறாள்.

கர்ப்பமாய் இருப்பதை விட இந்த சாக்கில் படிக்காமல் இருக்கலாம் என்று சந்தோசம் ஆகிறாள். அவளை ஒரு ஆங்கிலேய ஆண் கைனக்காலஜிஸ்டிடம் கூட்டி செல்கிறான். அவள் மிகவும் சங்கோஜப்படுகிறாள்.

*பெண் டாக்டர் வேண்டும்*

"பெண் டாக்டராய் இருந்தால் நன்றாக இருக்கும்" என்கிறாள் திரும்பி வரும் பொழுது. "பெண்கள் படித்தால்தானே?" என்கிறான் புன்னகையுடன்.

இவளுக்கு பிரசவம் பார்த்த கையோடு தன் சொந்த ஊருக்கு விடுப்பில் போகிறார் அந்த டாக்டர்.

பத்தாவது நாளில் குழந்தை மிகுந்த காய்ச்சலில் அழுது கொண்டே இருக்கிறது. பக்கத்தில் வேறு ஆங்கிலேய மருத்துவர்கள் இல்லாததால் ஒரு கை வைத்தியரை கூப்பிட்டு வருகிறான். அவனிடம் மகிழ்ச்சியாக, அரை மணி நேரம் முன்பு வரை கத்திக்கொண்டிருந்த தன் மகள் இப்பொழுது அமைதியாக தூங்குகிறாள் என்றாள். நாடியை பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறுகிறான். அதிர்ச்சியில் உறைகிறாள்.

*மனு நீதியை மதிக்க வேண்டுமாம்?*

"குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன காரணம் என்ன? " என்று கோபாலிடம் கேட்டு புலம்புகிறாள். படித்த டாக்டர் பக்கத்தில் இல்லாததே என்கிறான். அவள் கண்களை துடைத்து கொண்டு, ஒரு உறுதியுடன், *"என்னை டாக்டர் ஆக்குங்கள்"* என்கிறாள்.

அவளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து திரியும் இவனை "மனு நீதியை மதிக்காத இவனெல்லாம் பிராமணன் இல்லை, பித்தன்" என்று ஊர் பழிக்கிறது.

1880 இல் கிறிஸ்டியன் மிஷனரிகளே பெண்களுக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. பெரும்பாலும் அது வெள்ளைய பெண்களுக்கே.

*கல்வியால் மதம் மாற்றம் எண்ணமும்*

இவன் விடுவதாக இல்லை. அந்த பள்ளியின் பாதரை பார்த்து, இயேசு அடிக்கடி கனவில் வருவதாகவும், தான் கிருஸ்துவத்துக்கு மாற விரும்புவதாகவும், அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் மனைவிக்கு படிப்பறிவு இல்லை, அவளை பள்ளியில் சேர்ந்து படித்தால் அதை புரிந்து கொண்டு தான் குடும்பத்துடன் கிறிஸ்துவத்திற்கு மாற உதவியாய் இருக்கும் என்று புருடா விட்டு சீட்டை வாங்கி விடுகிறான்.

சீட்டு வாங்கினாலும் சீட்டு இல்லை. கருப்பு பெண் என்று பழிக்க பட்டு தரையில் உட்கார வைக்க படுகிறாள். அவள் அதை பொருட் படுத்தாமல் படிப்பில் முனைப்பாய் இருக்கிறாள்.

அதற்குள் ஊர் பஞ்சாயத்து கூடி, மனு தர்மத்தின் படி பெண்கள் படிப்பது பாவச்செயல் என்பதால் இவன் குடும்பத்தை தீண்ட தகாத குடும்பமாய் அறிவிக்கிறது.


*அவமானம்*

தெரியாமல் ஒரு முறை பெஞ்சில் உட்கார்ந்து விட்டதனால் இவளை சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புகிறது பள்ளி. ஒரே சமயத்தில் மத மற்றும் இன பேதங்களால் இரு முனையிலும் அவமான படுத்த படுகிறாள்.

இவர்கள் என்ன நம்மை புறக்கணிப்பது. நாம் இவர்களை புறக்கணிப்போம் என்று மஹாராஷ்டிரத்தை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இவளை பள்ளி படிக்க வைக்கிறான்.

*அமேரிக்கா சென்று படிக்க ஆசை*

அமெரிக்கா நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் மிஷனரிகளுக்கு சலிக்காமல் கடிதம் எழுதுகிறான். இந்தியாவில் நிலைமை இவ்வாறு இருக்க..

*அமெரிக்காவில் ஆனந்தியின் கதையை, தியோடிஸா அறிய..*

நியூ ஜெர்சியில், பல் வலி தாங்க முடியாமல் இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறாள் தியோடிஸியா. அந்த பல் டாக்டருக்கோ கூட்டம் அதிகம், காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அலுத்துக்கொண்டே அந்த வரவேற்பு அறையில் உள்ள அந்த பத்திரிக்கையை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தால், அதில் *ஆனந்தி* என்ற இந்திய பெண் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் சிரம படுவதை பற்றி அவள் கணவன் எழுதிய கடிதத்தை வைத்து ஒரு கட்டுரையை படித்த ஆச்சரியத்தில், அவளுக்கு பல் வலியே மறந்து, அந்த முகம் தெரியாத ஆனந்தி மேல் ஒரு நேசம் வந்து விட்டது.



*பென்சில்வேனியா மருத்துவ கல்லூரி*

அவர்கள் விரைவில் கடித நண்பர்கள் ஆனார்கள். தியோடிஸியை சித்தி என்றே அழைப்பாள் ஆனந்தி. அது தியோடிஸிக்கு விநோதமாகவும், மிகவும் பிடித்தும் இருந்தது. அவள் ஆனந்திக்கு பென்சில்வேனியா மருத்துவ காலேஜில் சேருவதற்கு உதவி செய்தாள்.

இவள் அமேரிக்கா பயணப் படுவதற்கு அதே மனு தர்மத்தை வைத்து பெண் படிப்பே பாவம் அதுவும் கடல் கடந்து படிப்பது பெரும் பாவம் என்று கலாட்டா செய்தவர்களை பார்த்து "ஹிந்து பெண் டாக்டர்கள் இல்லாததாலேயே ஹிந்து பெண்கள் பலர் இறக்கிறார்கள். அவர்களை காப்பதற்காக நான் படிக்க போகிறேன். ஹிந்து பெண்கள் சாவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் தர்மம் என்றால் அதை ஏற்க போவது இல்லை " என்று தெளிவாக சொல்லி விட்டு படகு எறியவளை என்ன சொல்லி தடுப்பது என்று ஸ்தம்பித்தது, அந்த கும்பல்.

அமெரிக்கா சென்று டாக்டர் மட்டும் அல்ல எம். டி . ஜி யும் முடித்து விட்டு ஊர் திரும்பிய போது அதே கும்பல் அவளை தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது.



*22 வயதிலேயே மரணம்*

டிபி யில், தன் 22 ஆம் வயதில் மரண படுக்கையில், "நான் மெனக்கெட்டதெல்லாம் வீணாகி விட்டதே. பலருக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க போகிறேனே?" என்று விரக்தி அடையும் பொழுது, கோபால் சொல்கிறான் " நீ வீண் அல்ல. துருவ விண்மீன். உன்னை வழிகாட்டியாக கொண்டு, கோடி பெண்கள், பல்வேறு துறைகளிலும் திறக்காத கதவுகளை உடைத்து திறப்பார்கள்"

முதல் இந்திய பெண் முதுகலை மரு த்துவரானா ர் *ஆனந்தி கோபால்* இன்றும் பலருக்கு வழிகாட்டியே.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..