காஞ்சி கைலாயநாதர் கோவில்..
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், இந்தப் பரிணாம வளர்ச்சியின் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பொ.ஊ. 700ஆம் ஆண்டளவில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் (நரசிம்மவர்மன் II) இதை கட்டத் தொடங்கினார். கல்வெட்டுகளில் இது ‘இராஜசிம்மேச்சரம்’ என அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தின் மிகப் பழமையான கற்கோயில்களில் இதுவும் ஒன்று.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதன்முதலாக அறிமுகமான கட்டுமானக் கோயில் தொழில்நுட்பத்தை, இராஜசிம்மன் கைலாசநாதர் கோயிலில் மேலும் மேம்படுத்தினார். பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோயிலின் பின், முழுமையான கல் கட்டிடக்கலையின் அழகிய வடிவம் கைலாசநாதர் கோயிலில் வெளிப்பட்டது. சிற்பக்கலையின் நுணுக்கமும், கட்டிட வடிவமைப்பின் ஒழுங்கும், பல்லவர் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.
இராஜசிம்மன் தன் மகன் மகேந்திரவர்மனையும், தன் பட்டத்தரசி ரங்கபதாகையையும் இந்தக் கட்டிடப்பணியில் ஈடுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
விருப்பாஷா கோவில் கர்நாடகா
தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள்.
கட்டிட அமைப்பு
தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும்.இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.
பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம்.
பல்லவர் கால ஓவியங்கள்
பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை 'இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி.1931 இல் கண்டுபிடித்தார்.துணைக் கோயில்கள் – சிற்பக்கலையின் சிறு உலகம்
பிரதான கோயிலைச் சுற்றி 58 சிறு துணைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனி சிறு விமானங்களைக் கொண்டுள்ளன.
வாயிலில் உள்ள கோயில் இராஜசிம்மனின் பட்டத்தரசி ரங்கபதாகை கட்டியதாகும்.
ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகள், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகள் காணப்படுகின்றன.
கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் கட்டிய மகேந்திரவர்மேச்வரகிரகம் உள்ளது.
“புனர்ஜனனி”
கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்க வடிவில் உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று “புனர்ஜனனி” என அழைக்கப்படுகிறது.
உள் மற்றும் வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், தரையில் படுத்தபடி ஊர்ந்து சென்று மீண்டும் வெளிவர வேண்டும். இது பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் ஆன்மீக அனுபவத்தை குறிக்கிறது.
பல்லவர் கால ஓவியங்கள்
பிரதான கோயிலும் துணைக் கோயில்களிலும் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன.
முக்கியமான ஓவியங்களில் ஒன்று:
சிவனும் பார்வதியும் நடுவில் கந்தருடன் காணப்படும் காட்சி.
விஜயநகர காலத்தில் (குமார கம்பணர் காலம்) இவ்வோவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம். இதனால் இவை “இரு அடுக்கு ஓவியங்கள்” என அழைக்கப்படுகின்றன.















.jpg)
