வியாழன், 28 ஜூலை, 2016

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி (21 October 1816)



 மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி
அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் மலேசியாவின் முதல்
தமிழ்ப்பள்ளியும் தொடங்கப் பெற்றது. அப்போது பள்ளியின் தலைவராக இருந்த ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings) என்பவரே தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கும் மூலகாரணமாக இருந்தவர் ஆவார்.

1816 அக்டோபர் 21-ஆம் திகதி மலேசியாவின் முதல் பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்டது. அது ஓர் ஆங்கிலப்பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரி ஸ்கூல் (*Penang Free School*). மலேசியாவில் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலேயே அதுதான் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆகும்.

தொடக்கக் காலங்களில் அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கல்வி போதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளுக்கு என தனியார் வகுப்புகள் ரகசியமாக நடைபெற்றன. லண்டனில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

எல்லாக் குழந்தைகளும் கல்வி வசதிகள் கிடைக்கப்படவில்லை. ஆக அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பினாங்கு பிரி ஸ்கூல் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத குழந்தைகளும் இருக்கவே செய்தார்கள். அந்த மாதிரியான ஏழைக் குழந்தைகள் கல்வி கேள்விகளில் இருந்து புறக்கணிக்கப் பட்டவர்களாக இருந்தனர்.

அந்த மாதிரியான ஒரு கல்விச் சூழல் அப்போது நிலவி வந்தது. அப்போது ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் எனும் மத போதகர் ஓர் அருமையான மாற்றுக் கருத்தைக் கொண்டு வந்தார். அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களின் தாய் மொழியிலேயே அவர்களுக்குப் போதிக்கலாமே எனும் மாற்றுக் கருத்து. அதன் பிரவாகமே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் ஒரு தமிழ்ப்பள்ளி பிறந்த கதையாகும். அதன் தொடர்ச்சியாக... ஒரு தமிழ்ப்பள்ளித் தொடங்குவதற்கு அன்றைய அரசாங்கத்திடம் இருந்து அனுமதியும் கிடைக்கப் பெற்றது.



இதில் குறிப்பிடத் தக்க விசயம் என்ன தெரியுமா. தமிழ்ப்பள்ளியில் பயின்ற அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்கு ஆங்கிலமும் போதிக்கப் பட்டது. அந்த வகையில்  உள்ளூர் சமய போதகரைக் கொண்டு தமிழ் மொழி போதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் மூலமாக ஆங்கில மொழி போதிக்கப் பட்டது. அத்துடன் குழந்தைகளின் தாய்மொழிக் கல்வியுடன் தொழில் கல்வியும் போதிக்கப் பட்டது.

21 October 1816 ~
First Tamil School in Malaysia.
It's 200 years of Tamil Education in Malaysia.

 

மலாயா–சிங்கப்பூர் தமிழ்க் கல்வி மற்றும் பத்திரிகை வரலாறு – விரிவான விளக்கம்

1. பினாங்கில் ஆங்கிலக் கல்வியின் தொடக்கம் (1816–1850)

1816ஆம் ஆண்டில் பினாங்கில் தொடங்கப்பட்ட Penang Free School என்பது மலாயா தீபகற்பத்தில் உருவான முதல் ஆங்கிலப் பள்ளி. இது பிரிட்டிஷ் குடியேற்ற நிர்வாகம் உருவாக்கிய கல்வி அமைப்பின் தொடக்கக் கட்டமாகும்.
இந்தப் பள்ளியில் 1821ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழியில் ஒரு வகுப்பு தொடங்கப்பட்டது என்பது மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவம்.

  • இது மலாயாவில் தமிழ் கல்வி அரசு ஆதரவு பெற்ற முறையில் ஆரம்பித்த முதல் நிகழ்வாகும்.
  • அக்காலத்தில் பினாங்கில் இருந்த தமிழ் வணிகர்கள், கப்பல் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்காக இந்த வகுப்பு தொடங்கப்பட்டது.

2. சிங்கப்பூர் ஃபிரி ஸ்கூல் மற்றும் தமிழ் கல்வி (1834)

1834இல் சிங்கப்பூர் ஃபிரி ஸ்கூலில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

  • சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்ததால், அங்கு பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள், வணிகர்கள், கப்பல் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • இதனால் தமிழ் மொழிக் கல்வி தேவையும் அதிகரித்தது.

3. ஆங்கிலோ–தமிழ் பள்ளிகளின் தோற்றம் (1850–1900)

1850இல் பினாங்கில் Anglo-Tamil School தொடங்கப்பட்டது.

  • இது ஆங்கிலமும் தமிழும் இணைந்து கற்பித்த முதல் கல்வி முறை.
  • ஆங்கிலம் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்க, தமிழ்மூலம் அடையாளம் பாதுகாக்கும் இரட்டை நோக்கத்துடன் இந்தப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

அதே ஆண்டில் மலாக்காவிலும் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.

  • மலாக்கா துறைமுகத்தில் பணிபுரிந்த இந்தியர்களின் குழந்தைகளுக்காக இது உருவாக்கப்பட்டது.

4. கிறிஸ்தவப் பாதிரியார்களின் பங்களிப்பு (1895–1900)

1895இல் கோலாலம்பூரில் தமிழ் கிறிஸ்தவப் பாதிரியார் தவத்திரு ஆப்ரகாம் ஒரு ஆங்கிலோ–தமிழ் பள்ளியைத் தொடங்கினார்.

  • இது பின்னர் 1897இல் Methodist English School ஆக மாற்றப்பட்டது.
  • கிறிஸ்தவ மிஷனரிகள் மலாயாவில் கல்வி பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர்; அதில் தமிழ்க் கல்வியும் ஒரு பகுதியாக இருந்தது.

5. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் விரிவாக்கம் (1900–1940)

செந்தூல் – தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி (1905)

சிலாங்கூரின் செந்தூல் பகுதியில் 1905இல் ராஜ சூரியா என்பவர் தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளியை உருவாக்கினார்.

  • இது தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்ததால், தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிவகுத்தது.

பிரிக்பீல்ட்ஸ் – விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி (1914)

கோலாலம்பூரின் இந்தியர் குடியிருப்பு மையமான பிரிக்பீல்ட்ஸில் 1914இல் விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.

  • இது சமூக முன்னேற்றம், சுயமுன்னேற்றம், கல்வி விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்திய பள்ளியாக இருந்தது.

அப்பர் தமிழ்ப்பள்ளி – தவத்திரு ஆத்மராம் (1937)

1937இல் தவத்திரு ஆத்மராம் தொடங்கிய அப்பர் தமிழ்ப்பள்ளி,

  • நகர்ப்புறத் தமிழர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்தது.
  • இது தமிழ் சமூகத்தின் கலாச்சார மையமாகவும் செயல்பட்டது.

6. தோட்டப் பகுதிகளில் தமிழ்க் கல்வி (1870–1905)

1870களிலேயே காப்பி, கரும்பு, பின்னர் ரப்பர் தோட்டங்களில் சிறு தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன.

  • இவை பெரும்பாலும் குடிசை வகுப்பறைகள்.
  • ஆசிரியர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்லது தோட்டத் தொழிலாளர்களில் கல்வி தெரிந்தவர்கள்.
  • பாடங்கள் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்பட்டன.

1905இல் மலாயாவில்:

  • 13 அரசு ஆதரவு பெற்ற தமிழ்ப்பள்ளிகள்
  • 4 தனியார் தமிழ்ப்பள்ளிகள்
    இயங்கின.

இது தமிழர்கள் கல்வியை எவ்வளவு முக்கியமாகக் கருதினார்கள் என்பதை காட்டுகிறது.


7. மலாயாவில் இந்தியர்களின் மக்கள் தொகை (1901)

1901ஆம் ஆண்டில் மலாயாவில் 1,20,000 இந்தியர்கள் இருந்தனர்.

  • இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.
  • தோட்டங்கள், ரயில்வே, துறைமுகங்கள், சாலை கட்டுமானம் போன்ற துறைகளில் பணிபுரிந்தனர்.
  • கல்வி அவர்களின் சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய கருவியாக இருந்தது.

8. தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம் –  (1876–1912)

தமிழ்ப் பள்ளிகளுடன் சேர்ந்து, தமிழ் பத்திரிகைகளும் மலாயாவில் தமிழ் உணர்வை வளர்த்தன.

பினாங்கு – தங்கை நேசன் (1876)

மலாயாவில் முதல் தமிழ்ப் பத்திரிகை தங்கை நேசன் 1876இல் பினாங்கில் வெளிவந்தது.

  • இது கல்வி, சமூகம், மதம், அரசியல் ஆகியவற்றைத் தொட்டது.
  • வெளிநாட்டில் தமிழ் பத்திரிகை வெளிவந்தது என்பது அக்காலத்துக்கு மிகப் பெரிய சாதனை.

உலக நேசன் (1877)

அடுத்த ஆண்டே 1877இல் பினாங்கிலிருந்து உலக நேசன் வெளிவந்தது.

  • இது தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை காட்டுகிறது.

சிங்கை நேசன் – சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சிங்கை நேசன் வெளிவந்து, அங்குள்ள தமிழ் சமூகத்தின் குரலாக இருந்தது.

வர்த்தமானன் – ஈப்போ (1905)

1905இல் ஈப்போவில் இருந்து வர்த்தமானன் வெளிவந்தது.

  • இது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திய முதல் இதழ்களில் ஒன்று.

விஜயன் – சிங்கப்பூர் (1907)

1907இல் சிங்கப்பூரில் விஜயன் வெளிவந்தது.

  • இலக்கியம், கவிதை, சமூகச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டது.

ஞான சூரியன் – பினாங்கு (1912)

1912இல் பினாங்கில் ஞான சூரியன் வெளிவந்து,

  • தமிழ் கல்வி, மதம், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது.

1816 முதல் 1912 வரை மலாயா–சிங்கப்பூர் பிராந்தியத்தில்:

  • தமிழ்ப்பள்ளிகள்
  • ஆங்கிலோ–தமிழ் கல்வி
  • தோட்டப் பள்ளிக்கூடங்கள்
  • தமிழ் பத்திரிகைகள்

இவை அனைத்தும் சேர்ந்து தமிழர் அடையாளம், மொழி, கல்வி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தின.
இது மலேசியா–சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான நூற்றாண்டாகும்.

 




சனி, 16 ஜனவரி, 2016

தானங்களைப் போற்றும் தமிழ்ச் சமணம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - வள்ளுவர்.

பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக் காலத்தில் சமணச் சமயத்தில் இல்லை. எக்குலத்தைச் சேர்ந்தவரானாலும், தங்களது சமயக் கொள்கையைப் பின்பற்றினால் அவரைச் சமணர்கள் போற்றி வந்தனர். அருங்கலச் செப்பு எனும் நூலில் "பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று" என்று கூறப்பட்டுள்ளது.

பண்டைக் காலத்தில் சாதி பேதம் பார்க்காத தமிழகத்தில், சாதி பேதம் பாராட்டாத சமணச் சமயம் பரவியதில் ஆச்சரியமில்லை. மேலும் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர்கள் பேரறமாகக் கருதினர். இந்த நான்கும் அன்ன தானம், அபய தானம், ஔடத தானம், சாத்திர தானம் எனப்பட்டன. அன்ன தானம், சாத்திரம் போன்ற வார்த்தைகள் இப்படிப் பிரபலமானவைதான். இது குறித்துத் தமிழ் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி விரிவாக எழுதியிருக்கிறார்.

உணவு இல்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்துப் பசியைப் போக்குவது தலை சிறந்த அறம் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், அன்ன தானத்தைச் சமணர்கள் முதல் தானமாகக் கொண்டிருந்தனர்.

அடைக்கலத் தானத்தையும் அவர்கள் பெரிதாகக் கருதியுள்ளனர். அச்சத் தால் தங்களை நாடி அடைக்கலம் அடைந்தவர்களுக்கு, அபயமளித்துக் காப்பது அபய தானம் எனப்பட்டது. இதற்காகச் சமணக் கோயில்களை அடுத்துக் குறிப்பிட்ட சில இடங்கள் இருந்திருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவாக அஞ்சினான் புகலிடம் என்று பெயர். இந்த இடங்களுக்கு வந்தோரைச் சமணர்கள் பாதுகாத்திருக்கிறார்கள். தென்னார்க்காடு மாவட்டம் ஜம்பை, வடஆர்க்காடு மாவட்டம் தெள்ளாறு, மின்னல், தேவிமங்கலம் ஆகிய இடங்களில் கிடைத்த சாசனங்கள், இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

மூன்றாவதான ஔடத தானத்தை (மருத்துவ உதவி) பௌத்தர்களைப் போலவே சமணப் பெரியார்களும் செய்து வந்துள்ளனர். இதற்காக மருத்துவம் கற்று, நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்திருக்கின்றனர். சமண மடங்களில் இலவசமாக மருந்து கொடுக்கப்பட்டது, மக்களின் நன்மதிப்பைப் பெற உதவியது. சமணத் துறவிகள் இயற்றிய நூல்களுக்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரைக் கொடுத்திருப்பதில் இருந்து இதை அறியலாம்.



நான்காவதாகிய சாத்திர தானத்தை மற்ற எல்லாவற்றையும்விடப் பெரிதாகச் சமணர்கள் மதித்திருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியை இலவசமாக முதலில் கொடுத்தவர்கள் சமணப் பெரியோர்கள்தான்.


சமண மதம் இயற்கையை அழிக்காது வாழ வேண்டும் என்ற கொள்கையை உடையது என்பதால், சமணத் துறவிகள் மலைகளில் இயற்கையாக அமைந்த படுகை, குகைகளில் வாழ்ந்து வந்தனர். அந்த இடங்கள் உறங்குவதற்குப் பயன்பட்டதால் பள்ளிகள் எனப்பட்டன. இந்தச் சமணப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்துள்ளன. சிறந்த எடுத்துக்காட்டு, திருச்சிராப்பள்ளி.
சமணத் துறவிகள் தாங்கள் தங்கிய இடங்களில் இலவசமாகக் கல்வி அளித்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டதால்தான், நவீன காலத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் எனப்படுகின்றன.
மேலும், அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்தில் பனை ஏடுகளில்தான் நூல்கள் எழுதப்பட்டன. வசதி படைத்த சமணர்கள் தங்கள் வீடுகளில் நடை பெறும் திருமணம், நீத்தார்கடன் செலுத்தும் நாட்களில் தங்கள் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுத ஏற்பாடு செய்து, அவற்றைத் தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார்கள். இதற்கு ‘எழுதுவித்து' என்று பெயர். இதனால் வசதி இல்லாதோரும் அந்தப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இந்தச் செய்திகள் அனைத்தையும் மயிலை சீனி. வேங்கடசாமியின் எழுத்துகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த தானங்கள் அனைத்தையும் சமணத் துறவிகளும், மற்ற சமணர்களும் செய்துவந்தது சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்றவைதான். ஆனால், இவை அனைத்துமே மனித இனத்தின் அடிப்படைத் தேவைகள். மற்ற மதங்களைப் போதித்தோர், இவற்றைப் பரவலாக்குவதில் அந்தக் காலத்தில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைக்கு நாடு முழுவதும் அபய தானத்தைத் தவிர்த்த மற்ற மூன்று தானங்களையும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் போற்றுகிறார்கள். அன்ன தானம், மருத்துவம், கல்வி சார்ந்த சேவைகளை இலவசமாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கியது சமண மதம்தான் என்பதை உணர வேண்டும்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் ‘இடறல்’ அணுகுமுறை – புறநானூற்றுப் பாட்டு சாத்தனார் கூறும் வரிகள்

  இயலாமையைக் குறிப்பிட்டு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எழுதிய புறநானூற்றுப் பாட்டு ( 28) உயிரினப் பிறப்பில் எட்டு வகையான பேரச்சம் உண்டு. மூக...