கிட்டூர் ராணி சென்னம்மா
Chennamma of Kittur (14 November 1778 – 21 February 1829)
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடும்
போரிட்டு சிறைபட்டு சிறையிலேயே உயிரிழந்தவர் வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா.
இவர் கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் (1778)ல் பிறந்து கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவை மணந்து போர் கலைகள் பயின்று
தேசபக்தியோடு திகழ்ந்தவர்.
சென்னம்மா என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். ராஜ குடும்பத்தினர்
வழக்கப்படி சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம்,
மராட்டி, உருது மொழிகளைக் கற்றார்.
சென்னம்மாவின் தந்தை துலப்பா தேசாய், அவரது தாய் பத்மாவதி. அவர் ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்தார்; அவரது முன்னோர்கள் ஜைன மதத்தைப் பின்பற்றியவர்கள். பின்னாளில், அவர்களின் குடும்பத்தினர் லிங்காயத மதத்திற்கு மாறினர்.
சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு,
வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சலான வீராங்கனை என்று
பெயர் பெற்றார்.
15 வயதில் கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவுடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான்.
சென்னம்மாவின் திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன், சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார் சென்னம்மா.
வாரிசு இல்லாத ராஜ்ஜியம்
மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும்
எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தது ஆங்கில அரசு.
வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கூறி கிட்டூரை அபகரிக்கும்
எண்ணத்திலும் இருந்தது.
எனவே, இந்த சூழலை நல்ல வாய்ப்பு எனக்கருதி
சென்னம்மாவின் தத்துப்பிள்ளை சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது அன்னிய
ஆங்கிலேய அரசு. ஆங்கிலேயர்களின் வரி வசூல் விஷயத்தில் அதிருப்தியாக இருந்த ராணி
சென்னம்மா இந்த உத்தரவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
அதையே காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்து கிட்டூர்
ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். மிகப்பெரிய போர் மூண்டது. மிகவும் துணிச்சலுடனும்
தீரத்துடனும் ராணி சென்னம்மா போரிட்டார். ஆங்கிலேயப் படையில் உயிர்ச்சேதம் அதிக
அளவில் ஏற்பட்டது. 2 முக்கிய அதிகாரிகள்
சிறைபிடிக்கப்பட்டனர்.
சென்னம்மாவை நேராக வெல்ல முடியாததால் ஆங்கிலேயப் படைத் தளபதி
சாப்ளின், வஞ்சகமாக ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்துகொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றான்.
ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான
படையுடன் திரும்பவும் வந்து கிட்டூரை மீண்டும் தாக்கினான். இந்த போர் 12 நாட்கள் நீடித்தது.
நவீன போர்க் கருவிகள்
நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று
அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து ராணி சென்னம்மாவின் வீரர்களால்
தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல்
தீரமாக தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறை பிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல்
கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.
ராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக
கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால்
வெற்றிபெற முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில்
ஈடுபட்டும் ராணி தனது சிறை வாழ்வைக் கழித்தார். 51-வது
வயதில் சிறையிலேயே (1829) காலமானார். விடுதலைப்
போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய
சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா
கொண்டாடப்படுகிறார்.
