தோண்டத்தோண்ட வெளிவரும் தமிழர் நாகரிகம்

தமிழக அளவில் தொல்லியல் துறை கீழ்க்கண்ட இடங்களில் அகழ்வாராழ்ச்சி நடைபெற்றால் மேலும் தமிழரின் தொன்மை நாகரிகங்கள் வெளிப்படும்.

கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண்மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி.

இங்கிலாந்து தொல்லியல் அறிஞர் துப் ரெய்ஸ்  போன்ற ஒரு சில வெள்ளையர்கள் இந்த இடங்களில் அகழ்வாராழ்ச்சி செய்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கூறி உள்ளனர். 

தமிழகத்தை மூவேந்தர் மட்டுமன்றி பல்லவர், களப்பிரர், என ஏராளமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அம்மன்னர்களைப் பற்றிய வரலாறு, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றி தொல்லியல் சான்றுகள் நமக்கு புதுப்புது தகவல்களைத் தருகின்றன. அப்படி தமிழகத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இடங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்கள் இங்கே.



கரூர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கிரேக்க, ரோம, அரேபிய, சீன வியாபாரிகள் அதிக அளவில் வந்து சென்ற பிரசித்தி பெற்ற வர்த்தக மையம்.

ஆதிபுரம், கருவூர் வஞ்சி, கருவைப்பதி, வஞ்சுலாரண்யம், கர்பபுரம், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், ஷண்மங்கல ஷேத்திரம், வஞ்சிமூதூர் என, கரூருக்குத்தான் எத்தனை பெயர்கள்! தமிழகம் தாண்டி, கிரேக்க அறிஞர்கள் இவ்வூரைக் 'கேரூரா' என்றும், ஆங்கிலேயர்கள் 'கேரூர்' என்றும் அழைத்தனர்.



ஆன்பொருனை என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்நகரம். பெருங் கற்காலத்தைச் சேர்ந்த ஈமக்குழிகள், மண்பாண்டங்கள், ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழகத் தொல்லியல் துறை, 1973- ---74, 1977 --79, 1996இல் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டது. இதன் விளைவாக, ஏகப்பட்ட ரோம நாணயங்கள், செப்புக் காசுகள், வாசனைப் பொருட்கள் நிரம்பிய சட்டிகள், மணிமாலைகள், ஒயிலான ஆண், பெண் உருவங்கள் கொண்ட தங்க மோதிரமும் கிடைத்தன.

கொடுமணல்
ஈரோடு, பெருந்துறைக்கு அருகே, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கொடுமணல். பண்டைய காலப்பெயர் கொடுமணம். 1999, -2000 ஆம்
ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது. ரோம நாணயங்கள்; கிளிஞ்சல்கள், கண்ணாடி வளையல்கள், நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சங்குகள்; மான் கொம்புகள், செப்புக் காசுகள் கிடைத்தன.

இவைதவிர, 'பாண்டியர் வீடு,' அல்லது 'பாண்டியர் குழி' என அழைக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (burial sites) கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெருங் கற்காலத்தைச் (megalithic) சேர்ந்தவை.

முற்காலத்தில், மணிகளுக்கும், அணிகலன்களுக்கும் இப்பகுதி புகழ் பெற்றிருந்ததால், கோமேதகம் (beryl), படிகக் கல் (quartz), இரத்தினம் (agate) ஆகியவை கொண்ட நீண்ட மணிமாலைகள் அதிகம் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு, ஒரு ஈமக்குழியில் 700 மணி மாலைகள் கிடைத்தனவாம்!

மரக்காணம்
மரக்காணம் என்னும் ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகில் உள்ளது. சிறுபாணாற்றுப் படை நூலில், இவ்வூர் 'எயிற்பட்டினம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எயில் என்றால் மதில் (Wall) என்று பொருள். 'மதிலொடு பெரியபட்டினம்' - மதிலைக் கொண்ட கடற்கரைப்பட்டினம் என்பதே பொருள்.

மணற்கானம் (மணற்காடு) என்ற சொல்லே பிற்காலத்தில் மரக்காணமாகத் திரிந்தது என, அறிஞர் இராசா மாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

இவ்வூரில் உள்ள பூமீஸ்வரர் கோவிலுக்கு அருகில் 2005 , 2009 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில் சுடுமண் குழாய், சொரசொரப்பான சுடுமண் பானை ஓடுகள் கிடைத்தன.


விஜயநகர அரசர்கள் காலத்திய செப்புக் காசுகள், சுடுமண் கெண்டிகள் (குறுகலான வாய் கொண்ட மண் குவளைகள்), சுடுமண் புகைப்பான்கள், இரும்புப் பொருட்கள், பீங்கான் ஓடுகள், செம்பு வளையம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

மாங்குடி
2002ஆம் ஆண்டு, தமிழகத் தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. சிறிய கற்காலத்தில் பயன்படுத்திய சிறிய, பெரிய ஆயுதங்கள், மண்பாண்ட மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

4, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க ரோம நாணயங்கள்; பிற்காலச் சோழ, பாண்டிய வம்சத்தைச் சார்ந்த சிற்பங்கள், 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ், கிரந்த கல்வெட்டு ஒன்று, இப்பகுதியில் பாண்டியப் படை ஒன்று இருந்ததாகக் கூறுகிறது. இம்மாதிரி சிறிய சேனைகள் பெருவழிகளில் நிற்பதும், அவற்றைச் சேர்ந்த வீரர், குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அருகிலேயே அமைந்திருப்பதும் வழக்கம். அவ்வாறு மாங்குடியின் அருகே ஒரு படை இயங்கியதும் கண்டறியப்பட்டது.

16--17ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர்களும், தென்காசியைச் சேர்ந்த பாண்டிய வம்ச வழித்தோன்றல்கள், பின்னாளில் ஆங்கிலேயரும் இப்பகுதியை ஆட்சிசெய்ய, இவற்றின் சான்றாகக் காசுகளும் கண்டெடுக்கப்பட்டன.



பட்டரைப்பெரும்புதூர்
பட்டரைப் பெரும்புதூர் திருவள்ளூருக்குச் சற்று மேற்கே, கொற்றலையாற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. 2016இல் இங்கே அகழாய்வு நடந்தது.
மண்ணால் ஆன 23 உறைகளுடன் கூடிய உறை கிணறு, விதவிதமான உருவங்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், கோடரி, வளையல் துண்டுகள், கண்ணாடி, கிளிஞ்சல் நகைகள், முத்துமணிகள், கனிமத்தால் ஆன கூரை ஓடுகள் என, மனித வரலாற்றுக்கும் முற்பட்ட காலகட்டத்திலிருந்து ஏகப்பட்ட சான்றுகள் கிடைத்தன.

நறுமணப் புகைக்காக பயன்டுத்தப்பட்ட மட்கலன், இருபக்க முனையுடைய கல்லால் உருவான கத்திகள், கற்கால கோடரிகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், யானை தந்தத்தினாலான கழுத்தில் அணியும் பதக்கம் போன்ற ஆபரணங்களும் கிடைத்துள்ளன.

பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்று தொடக்க காலம் என, ஐந்து காலங்களுக்கான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்திருப்பது இந்தப் பகுதிகளில்தான்.

அழகன்குளம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள ஊர். தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பானை ஓடுகள், ரெளலட்டட், ஆம்போரா பானை ஓடுகள் கிடைத்தன. தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த ஓடுகள் கி.பி. ௧௦௦ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.

துளையுடன் கூடிய ஓடுகள், செங்கற்கள், மணிகள், ரோமானியக் காசுகளும் கிடைத்தன. காசுகளில் முன்புறம் ரோமப் பேரரசரின் தலைப் பகுதியும் பின்புறம் வெற்றி தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன.


சதுர வடிவிலான பாண்டியர் காசுகளும் கிடைத்தன. வடநாட்டு பானை ஓடுகளும் கிடைத்துள்ளதால் வட இந்தியாவின் கங்கை நதி பகுதிக்கும் அழகன் குளத்துக்கும் கிடையே பண்டைக் காலத்தில் வர்த்தகத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..