மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..







































தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.  அறம் என்றால் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஓர் அரிய விளக்கம் கூறுகிறது.


1) அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில். (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை: 228 - 230)

 2) கள்ளுண்ணாமை,  கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்திச் செயலுக்கேற்ப நமக்கு சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று உணர்த்தும் பகுதி இது.   மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். (ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90)

3) இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது, இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது. (சிறைசெய் காதை: 135 - 138)

4) பிறவி,  துன்பம் என்பதையும் அத்துன்பத்தை அடையாமலிருக்கப் பிறவாமை எய்தவேண்டும் என்பதையும் மணிமேகலை கூறுகிறாள்.   பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம்.
(ஊர் அலர் உரைத்த காதை: 64 - 65) 

5) உதயகுமரனின் சாவில் வருந்தும் அவள் தாயிடம் மணிமேகலை,  ஆறுதல் கூறுவதாக வரும் பகுதியில் உயிர் என்பது வேறு ஒரு பிறவியில் வேறு உருவெடுக்கும். அதனால் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.   உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். (சிறைவிடு காதை, 73 - 79)

6) இன்னோர் இடத்தில்,  பசிப்பிணியின் கொடுமையும் அதைத் தீர்ப்பதன் நன்மையும் எடுத்துரைக்கப்படுகின்றன.   பசியின் கொடுமையைக் கூறுகையில்,  ‘அது நல்லகுடியில் பிறந்து பெற்றிருக்கும் நல்ல தன்மைகளை அழித்துவிடும்; நம் பெருமைகள், கல்வியறிவு, நாணம், தோற்றம் அனைத்தையும் கெடுக்கும்; இல்லத் துணைவியோடு தெருவில் நிற்கச்செய்யும் என்று உணர்த்துகிறது மணிமேகலை.   குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. (பாத்திரம் பெற்ற காதை: 76 - 80, 95 - 96) 
 
பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு, பரத்தமை ஒழிப்பு, கொலைகளவு ஒழிப்பு எனப் பல சீர்திருத்தங்களை இக்காப்பியம் பேசுகிறது.  அமுத சுரபி என்ற பாத்திரக் கற்பனை பசியொழிப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறப்பால் பெருமையில்லை, செய்கையால்தான் பெருமையுண்டு என இக்காப்பியம் நிறுவுகிறது. பிற சமயங்களின் கொள்கைகளையும் எடுத்துக்காட்டிப் புத்தசமயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருப்பது இலக்கியத்தைக் கொள்கை பரப்பும் கருவியாக ஆக்கியிருக்கும் முக்கியமான மாற்றத்தை உணர்த்துகிறது. ஊன்துவை அடிசில் உண்டு பழங்கள்ளை மாறிமாறி அரசனும் குடிகளும் மாந்துவதைப் பெருமையாக விதந்து பேசும் சங்க இலக்கியத்தடம் மாறிப் புலால் மறுத்தலையும் கள்ளுண்ணாமையையும் மணிமேகலை வற்புறுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றமெனலாம்.

 உலகில் மரணதண்டனையே கூடாது என்று சொல்லி வரும் இன்றைய நிலையில், தமிழ்ப் பெருங்காப்பியத்தில் ஒன்றான மணிமேகலை சிறை ஒழிப்பு பற்றி கூறுகிறது. சிறையே இருக்கக் கூடாதாம்.

சிறை ஒழிப்பு பற்றி உலகில் எந்த நாட்டிலாவது எந்த நீதி நூலாவது கூறி இருக்கிறதா?

கருத்துகள்

  1. என் தேடலுக்கு தக்க பதில் கிடைத்தது. நன்றி

    பதிலளிநீக்கு
  2. னோன்பி மனிமேகலய்யார் போட்ரி!
    ------------------------------------------------------
    கானார், கேலார்,
    கய், கால் முடப்பட்டோர்,
    னோய் னடுக்குட்ரோர்,
    யாவரும் வருக என்ரு
    ஈகய், ஈகம் கடய்ப்பிடிமின்.

    வயது முதிர்ந்தோர்,
    பேனுனர் இல்லோர்,
    புகலிடம் இலந்தோர்,
    யாவரும் வருக என்ரு
    ஈகய், ஈகம் கடய்ப்பிடிமின்.

    மன னலம் இலந்தோர்,
    ஒட்டு உரவு துரந்தோர்,
    ஆதரவட்ர மலலய்யர், சிருவர்,
    யாவரய்யும் அரவனய்த்து
    ஈகய், ஈகம் கடய்ப்பிடிமின்.

    பேரிடர்ப் பட்டோர்
    யாவரும் வருக என்ரு,
    தங்குமிடம் கொடுத்து,
    உனவு, உடுப்பு கொடுத்து,
    ஈகய், ஈகம் கடய்ப்பிடிமின்.

    ------------------------------------------------------
    ------------------------------------------------------

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..