வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்

 வெண்ணிப்போர்  -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர் 

வெண்ணியில் நடைபெற்ற போரில் சோழன்  கரிகாலன் பெருவளத்தானும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு தமது வீரத்தைப் பறைசாற்றி இருந்துள்ளனர். இதில் வீரமும், மானமும் புகழ் பெற்று நின்றன என்பர். 

இதில் போரில் தோல்வியுற்றப் பின்னர் சேர நாடு ஒளி இழந்தது என்று சங்ககாலப் புலவர் பெருமக்கள் கூறுகின்றனர்.  

கழாத்தலையார் என்ற சங்ககாலப் புலவர் புறநானுற்று வரிகளில்,

"மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, 
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழாவும் 
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் 
வாள் வடக்கிருந்தனன்" (புறம் 65) 

விளக்கம்: முரசு முழங்கவில்லை, யாழ் இசையை மறந்து. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர்கள் உழுதலைத்தவிர்த்தனர். ஊர்புற வேலிகள் விழா ஏதுமின்றி கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. 

என்று சேர நாட்டில் உள்ள சோர்வான நிலையை எடுத்து இயம்புகிறார். 

அதே சமயத்தில் களத்தில் வெற்றி அடைந்த கரிகாலனைப் பாடிய வெண்ணிக்களத்துக்குரிய வெண்ணியக்குயத்தியார் என்ற பெண்பாற்புலவர், சேரனின் மானத்தைப் பற்றியும் பெருமிதமாகவும் புறநானுற்றில் பாடுகிறார். 

"நளி இரு  முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற 
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை 
மிகப் புகழ் உலக மெய்திப் 
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே (புறம்  66) 

கரிகாலன் வெற்றியால் புகழ் அடைந்தானாம்; சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம், என்று ஒருவனது வீரத்தின் புகழ்! அடுத்தவனது மானத்தின் புகழ்! எது நல்லது? பின்னது அல்லவா? என்று கேட்கும் வெண்ணிக்குயத்தியார் வீரத்தை விட மானமே பெரிது என்று நமக்கு உணர்த்துகிறார்.

சேரன் வீரம், மானம் நாடி மாளத் துணிந்த பெருமித நிலை ஆகிய செய்திகள் தமிழகம் எங்கும் பரவின. அப்பெருஞ் சேரனைக் காணும் ஆர்வம் புலவர் பெருமக்கள் மத்தியில் எழுந்தது. சேரலாதனுடன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நோக்கில் அவனை நோக்கிப் பயணித்தனர். 

"கரிகால் வளவனோடு வெண்ணிப் பறந்தலைப் 
பொறுத்து புண் நாணிய சேரலாதன் 
அழிகள  மருங்கின் வாள் வடக்கிருந்தன 
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் 
அரும் பெற லுலகத் தவனோடு செலீ இயர் 
பெரும் பிறிதாகி யாங்கு" (அகம் 55)


என்று மாமூலனார் என்ற புலவர் நமக்கு எடுத்து உரைத்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..