தமிழர்கள் கொண்டாடிய சித்திரைத் திருநாள்
சித்திரையை கொண்டாடுவோம்
தமிழ் மரபில் சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.
மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடையது. சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப்படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தில்
பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சித்திரையின் சிறப்பை பதிவு செய்து வைத்துள்ளன. இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. "சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.
சித்திரை மாதத்தில் வானத்திலே மேகம் சித்திரம் போல இருக்கும். அதாவது சித்திரங்களால் ஒப்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தோன்றும். இக்காலத்தில் 'சித்திரைக் கார்' என்னும் நெல் அறுவடை செய்யப்படும். இம்மாதம் மக்களின் உணவை நிறைவு செய்யும் மாதமாக இருப்பதால் சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இன்று வரை உள்ளது.
சித்திரைக் கார் நெல்
கார் நெல் (Kar), கார் அரிசி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது.
ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக் கிரகித்துக்கொண்டு செழித்து வளரக்கூடியது.
மேலும், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த இரகம். சிவப்பு நிற நெல்லும், வெள்ளை அரிசியும் உடையது, நடவு செய்ய மட்டுமே ஏற்ற இரகமாக உள்ள இது, பயிர் வளர்ந்து பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர் நிரம்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இந்த நெல் இரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர் முற்றி முழு வளர்ச்சி அடைந்து விளையக்கூடியது இதன் மூலம் அதிகம் தண்ணீர் தேங்கினாலும் இதற்கு பாதிப்பு இல்லை. இதன் வைக்கோல் அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில் இருந்தாலும் அழுகுவதில்லை.
அகத்தியர் குணபாடம் என்ற சித்தர் பாடலில்
"காரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்
பாரறிய வாயுவையும் பண்ணுங்காண் – நேரே
கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த
உரப்பாகும் என்றே யுரை".
மேற்கூறிய பாடலின் பொருளானது, மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தருவதாகவும், இதனால் கரப்பான் நோய்கள் உண்டாகும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது.
சித்திரை மாத முழு நிலவு நாளில் 'சித்திரைக் கஞ்சி' வழங்கும் நடைமுறையும், காவேரி ஆற்றில் இம்மாதத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கிற்கு 'சித்திரைச் சிலம்பன்' எனச் சிறப்புப் பெயரும் இருந்துள்ளது.
நமது முன்னோர் இயற்கையின் தொழிற்பாட்டை நன்கு கண்காணித்து வாழ்ந்தனர். ஐம்பெரும் பூதங்களான நீர்,நெருப்பு, காற்று,மண், ஆகாயம் என்பவற்றில் சித்திரை மாதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து அம்மாதத்தைத் தனித்துவமுடையதாகக் கருதி வாழ்ந்துள்ளனர். சித்திரை மாத நிறைமதி நாளில் திருவிழாக்கள் நடத்தினர். சித்திரா பௌர்ணமி, சித்திரைக் கஞ்சி, சித்திரைக் கார், சித்திரைச் சுழி, சித்திரைச் சிலம்பன், சித்திரைக் கதை, சித்திரைக் குழப்பம் என்ற சொற்களின் பயன்பாடு இம்மாதத்தின் சிறப்பை நன்கு விளக்குகிறது.
சித்திரை மாதத்தின் முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்பட்டது. தை மாதம் தமிழர் புது வருடத்தின் தொடக்க மாதமாக இருந்ததையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்துள்ளன. எனவே எதை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பங்கள் தமிழக அரசியலில் இருந்தாலும், சித்திரையும், தை யும் தமிழர்கள் மத்தியில் சிறப்பு பெற்ற மாதங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.
பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா
ஜம்பெரும் காப்பியங்களில் முதன்மையானதாக விளங்குவது சிலப்பதிகாரம். இந்த காப்பியத்தின் கதாநாயகர்களான கோவலன், கண்ணகி பிறந்து வாழ்ந்த மண் என்ற பெருமையை பூம்புகார் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூம்புகார் வாணிபத்தில் சிறந்து விளங்கியதும், இங்கு பிறந்த மகான் பட்டினத்தடிகள் கப்பல் மூலம் பல நாடுகளுக்கு வாணிபம் செய்ததும் காப்பியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா நடந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் தமிழர்களின் பழைமையை பறைசாற்றுகிறது என்றால் மிகையாகாது. இந்த காப்பியத்தின் எச்சங்களாக இன்றளவும் சாயவனம் சாயவனேஸ்வரர் கோயில், சதுக்கு புதங்கள் சான்றாக காட்சியளிக்கின்றன.
சித்திரா பௌர்ணமியின் விடையாற்று விழாவில் கோவலனும் மாதவியும் கடற்கரையில் பாடிய பாட்டே கண்ணகி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாவும், கோவலனைக் கண்ணகியுடன் கொண்டு சேர்ப்பதாகவும் அமைந்தது. சித்திரை முழு நிலவு விழா இல்லையேல், கோவலன் கண்ணகியுடன் மீண்டும் சேர வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதனைக் கருத்தில் கொண்டே இளங்கோவடிகள் மாடல மறையோன் கூற்றில் வைத்து, ""மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது" என்கிறார்.
சித்திரா பௌர்ணமி விழா
கண்ணகி கதையின் வளர்ச்சிக்குச் சிலம்பு துணைக்காரணமாகவும், சித்திரா பௌர்ணமி விழா முதற்காரணமாகவும் அமைகிறது. எந்த வகையில் பார்த்தாலும் சித்திரை முழுநிலவு கண்ணகியுடன் தொடர்புப்படுவதால், அந்தப் பத்தினித் தெய்வத்தின் விழாவைச் சித்திரை முழு நிலவு நாளில் கொண்டாடுவதில் தவறில்லை.
Chithirai in Tamil tradition.
It highlights various festivals such as Indra Vizha and Vasantha Vizha that are celebrated during the full moon day of Chithirai in places like Mamallapuram and Poompuhar. The month of Chithirai is associated with the harvest season, leading to village-wide festivals and general happiness among people. It is also linked to spring, with celebrations taking place on beaches and riverbanks.
Ancient Tamil literature records the significance of Chithirai, describing it as the time for spring festivals, with references in works like Silappadikaram. The month is characterized by clouds resembling paintings, and the harvest of 'Chithirai rice'. Traditional practices include offering Pongal to the sun and distributing 'Chithirai Kanji'. The paragraph also mentions the observation of natural changes during Chithirai by ancestors, who considered it a unique month.
The first day of Chithirai is regarded as the beginning of the year, although there is some political confusion about whether Chithirai or Thai should be celebrated as the Tamil New Year. Despite this, both months are special to Tamils. The hope is that future generations will resolve these confusions through proper research and clear thinking.
Overall, Chithirai is celebrated as the start of the summer season, with various festivals and rituals marking its significance in Tamil culture.
கருத்துகள்
கருத்துரையிடுக