வெள்ளி, 30 அக்டோபர், 2026

பட்டாசு, போதும் பட்டாச்சு!


பட்டாசு, போதும் பட்டாச்சு!
பூமித்தாய் அழுது கண்ணீர் விட்டாச்சு!
மகிழ்ச்சி என்ற பெயரினிலே
மரணத்தின் விதைகள் விதைத்தாச்சு!


அறுபது டெசிபல் கடந்தாலே
அச்சமுறும் உயிர்கள் பலவே,
நூற்று இருபது டெசிபல் சத்தத்தில்
நொடியில் நடுங்கும் உலகமே!


வண்ணங்கள் பொழியும் வானமென
வாரி இறைக்கும் நஞ்சுகளே,
பொட்டாசியம் முதல் பேரியம் வரை
பூமிக்குள் புகும் கொடியவையே!


நீரில் விழும் கழிவுகளால்
நீர்நிலைகள் நஞ்சாகும்,
மீனும் தவளையும் மௌனமாக
மெல்ல மெல்ல மாயாகும்!

மண்ணில் விழும் கரும்புகையால்
மட்கும் உயிர்கள் மறைந்துபோம்,
உழவன் விதைத்த நம்பிக்கையும்
உலர்ந்த கனவாய் கரைந்துபோம்!

காற்றில் கலக்கும் கரும்புகைகள்
காலத்தின் மூச்சை நெரிக்கின்றன,
பறக்கும் பறவைக் கூட்டங்களைக்
பாதியில் பூமிக்கு இறக்குகின்றன!

நெருப்பின் வெப்பம் உயர்ந்திடவே
நிலவும் காலம் மாறுகின்றது,
ஆகாயம் நோயுற்று அழுகையிலே
ஓசோன் போர்வை கிழிகின்றது!

கருவில் வளரும் குழந்தைக்கும்
காயங்கள் தந்து செல்கின்றது,
காது, கண்கள், இதயம் கூட
கண்ணீரால் கதறச் செய்கின்றது!


பட்டாசின் வெடிச் சத்தத்தால்
பறவையின் கரு கலைகின்றது,
பல்லுயிரின் பேரரசை
படிப்படியாக அழிக்கின்றது!


பறவைகள் இல்லையேல் காடில்லை,
காடுகள் இல்லையேல் ஓடையில்லை,
ஓடைகள் இல்லையேல் ஆறில்லை,
ஆறுகள் இல்லையேல் வாழ்வில்லை!

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற
பாரதத்தின் பழமொழி கேளீர்;
உயிர்கள் வாழ நாம் வாழ்வோம் என்ற
உண்மையின் பாதையை நாடீர்!


வீட்டு வாசல் கோலமிட்டு
எறும்புக்கும் உணவு வைத்தோம்,
தானியம் தூவி பறவைகளுக்கு
தாயென அன்பை கொடுத்தோம்!


அந்த வழியை மறந்துவிட்டு
அழிவு விழாவை ஏன் செய்வோம்?
பல்லுயிர்கள் தழைக்குமாறு
பசுமை தீபம் ஏற்றி வாழ்வோம்!


செடியை நடுவோம், மரம் வளர்ப்போம்,
சிறகுகள் கொண்ட உயிரைக் காப்போம்;
பட்டாசுகள் ஒழியட்டும்,
பல்லுயிர்கள் தழைக்கட்டும்!


"பசுமை தீபாவளி கொண்டாடுவோம்;
பூமியின் புன்னகையை பாதுகாப்போம்!"





வ. கி. அறவாழி, காஞ்சிபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செம்மொழித் தமிழ்

  முன்னைப் பழமைக்கும் பழமையாய் , மூவுலகின் நினைவுகளைத் தாங்கி நின்று , பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் , பிறைபோல் வளர்ந்து புன்னகைக்கு...