வர்த்தமான மகாவீரர்

 

வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்‌ இருபத்து நான்காவது (24) தீர்த்தங்கரராகக்‌ கூறப்படுகிறார்‌. 

அர்த்தமாகதியில்‌ எழுதப்பட்ட பல நூல்களிலும்‌ இவர்‌ (வைசாலிகா) வேசாலியன்‌ என்றே அழைக்கப்பட்டார்‌. 

'ஜைனமதம்‌' என்ற உயர்ந்த கட்டடத்திற்கு மிக உறுதியான அடித்தளம்‌ இட்டவர்‌. அதன்‌ காரணமாகவே இன்றைக்கும் ஜைனமதம்‌ விரிசல்களும்‌ ஓட்டைகளும்‌ இன்றி சிறந்து நிற்கக்‌ காண்கிறோம்‌. மற்றைய மதங்களைப் போல இவர்களுக்குள் பூசல்கள் இல்லை.

மகாவீரர்‌ “நிகந்த நாதபுத்த” என்ற பெயருடன்‌ நிர்கிரந்த பிரிவின்‌ தலைவராக விளங்கினார்‌ என்பதையும்‌ அவருடைய பரிநிர்வாண காலத்தைப்‌ பற்றியும்‌ பவுத்த நூல்கள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன. 

பெற்றோர்‌ இவருக்கு வர்த்தமானர்‌ என்று பெயரிட்டனர்‌. யசோதா என்ற பெண்ணை மணந்து அனோஜா என்ற மகளுக்கும்‌ தகப்பன்‌ ஆகிறார். 

பெற்றோரின்‌ இறப்பிற்கு பின்னர்‌ அரசபதவிக்கு வந்த தன்‌ அண்ணன்‌ நந்தி வர்த்தன்‌ மற்றும்‌ முக்கிய மனிதர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ சமணத்‌ துறவியானார்‌. 

தன்னுடைய முப்பதாவது வயதில்‌ அரச வாழ்வைத்‌ துறந்து பன்னிரெண்டு 
ஆண்டுக்காலம்‌ கடுந்தவமிருந்து ஞானம்‌ பெற்றார்‌. தன்னுடைய 72 வது வயதில்‌ பாவாபுரியில்‌ பரிநிர்வாணம்‌ அடைந்தார்‌. 

72 ஆண்டுக்காலம்‌ அலைந்து திரிந்து கடுந்தவத்தால்‌ கேவல ஞானம்‌ பெற்ற அவர்‌ தம்முடைய 42 வது வயது முதல்‌ முப்பதாண்டுகள்‌ தம்‌ கொள்கைகளான கொல்லாமை, வாய்மை, பிறர்‌ பொருள்‌ விழையாமை, மிகுபொருள்‌ வெஃகாமை, பிரம்மச்சரியம்‌ என்ற ஐந்தையும்‌ மக்களுக்குப்‌ போதித்தார்‌. 



(மகாவீரர் பொன்னூர் மலை, வந்தவாசி)

ஜைனமதத்தின்‌ பழைய தத்துவங்களின்‌ நீண்ட பயணத்தில்‌ சில சீர்த்திருத்தங்களை கொண்டு வந்து கட்டுக்‌ கோப்பான மதமாக மாற்றினார்‌.

மக்களை ஒன்று திரட்டி. வழி நடத்தும்‌ சிறந்த வித்தையை அறிந்திருந்தார்‌. 

சங்கங்களை உருவாக்கினார்‌. பெண்களுக்கும்‌ தம்‌ மதத்தில்‌ இடங் கொடுத்தார்‌. 

பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினாலு.ம்‌ உலக வாழ்வில்‌ ஈடுபட்டவர்களுக்கென ஸ்ராவக விரதத்தை ஏற்படுத்தியதால்‌: ஜைன மதத்தின்‌ வேர்‌ மக்கள்‌ வாழ்வின்‌ அடிவரை பரவித்‌ தழைத்தது. 

மகாவீரர்
மகாவீரர்‌ வலியுறுத்தி சென்ற ஐந்து விரதங்கள்‌ ஜைன மதத்தி னரால்‌ இன்று வரை மாறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்ற பெருமையோடு அவருடைய மதக்‌ கொள்கைகளின்‌ தாக்கம்‌ இந்தியாவில்‌ வளர்ந்த பல மதங்களிலும்‌ காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்‌. அதிலும்‌ குறிப்பாக கொல்லாமை அதாவது உயிர்க்கொலை செய்தலை வெறுக்கும்‌ மாபெரும்‌ 
அறத்தைத்‌ தொடக்க காலத்திலிருந்து வலியுறுத்தி வரும்‌ நிலையில்‌ இந்து மதம்‌ போன்ற பிற பெரிய மதங்களும்‌ பிற்காலத்தில்‌ இதனை ஏற்றுக்‌ கொண்டு கொல்லாமையை வலியுறுத்தி வருவதைக்‌ காணலாம்‌. இது போல வாய்மை(சத்தியம்‌) என்பதையும்‌ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

யாகங்களில்‌ உயிர்கள்‌ பலியிடப்படுவதை வெகுவாகக்‌ கண்டித்தும்‌, கள்ளுண்ணும்‌ பழக்கத்தைக்‌ கைவிட்டெடொழிக்க கோரியும்‌ 2500 ஆண்டுகளுக்கு முன்பே அஹிம்சைப்‌ புரட்சி செய்த பெருமையாளர்‌. மகாவீரர்‌, கொல்லாமை, வாய்மை, கள்‌ உண்ணாமை இவற்றையே அடிப்படைக்‌ கொள்கையாக்கி நாடெங்கும்‌ அதைப்‌ பரப்பி மக்களை நெறிப்படுத்தியவர்‌. 

இந்திய மக்கள்‌. மனதில்‌ அவ்வெண்ணங்களை இன்று வரை நிலைத்திருக்கும் படிச்‌ செய்தவர்‌. அதனால்‌ அவர்‌ மகாவீரர்.

காந்தியடிகள்‌ 
அம்மாவீரரின்‌ கொள்கைகளை இந்த இருபதாம்‌ நூற்றாண்டில்‌ மீண்டும்‌ நாடெங்கும்‌ பரப்பியவர்‌ மகாத்மா காந்தியடிகள்‌. அவர்‌ எம்‌ மதமும்‌ சம்மதம்‌ என்ற கொள்கையினை உடையவார்‌. அஹிம்சை மற்றும்‌ வாய்மை என்பதை தாரக மந்திரமாகக்‌ கொண்டவர்‌. அதன்படி. வாழ்ந்தவர்‌. எனவே இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற அஹிம்சைப்‌ புரட்சியாளர்‌ காந்தியடிகள்‌ வரை இந்திய மக்கள்‌ அனைவருடைய மனத்திலும்‌ அஹிம்சையையும்‌ வாய்மையையும்‌ ஆழமாகப்‌ பதியச்‌ செய்தவர்‌ வர்த்தமான மகாவீரர்‌ தான்‌ என்பதில்‌ ஐயமில்லை. 

இன்று குடி குடியைக்‌ கெடுக்கும்‌ என்று இடிமுழக்கம்‌ செய்கிறோம்‌. இதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே முழக்கம்‌ செய்து மக்களை நல்வழிப்‌ படுத்தியவர்‌. எனவே மகாவீரர்‌ கொள்கைகளை தாமும்‌ கடைப்‌ பிடித்து நடக்க சபதம்‌ எடுப்போம்‌.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..