மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது உண்மையா?

வடக்கு எல்லை

தமிழர்களின் பாரம்பரிய பகுதி திருப்பதி வரை. விஜயநகர அரசின் தலைநகரம் திருப்பதிக்கு அருகில் சந்திரகிரிக்கு மாற்றப்படும் வரையில் தெலுங்கு மொழி அங்கு இல்லை. ஆனால், வரலாறு கணக்கில் கொள்ளப்படவில்லை. திருப்பதி, 1953 மாநிலப் பிரிப்பில் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது.

திருத்தணியும் ஆந்திரத்திற்கு அளிக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் பட்டாஸ்கர் கமிட்டி முடிவுக்குப்பின் தான், திருத்தணி மற்றும் சுற்றி இருக்கும் 300 கிராமங்களில் தமிழ் பெரும்பாண்மை நிறுவப்பட்டு 1960 இல் தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பதி பகுதிகளில் இந்த வாய்ப்பு கூட அளிக்கப்படவில்லை.

1921 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 77%

1931 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 69.1%. தெலுங்கு மக்கள் விழுக்காடு 19% தான்.

பாரம்பரியமாகவும், மக்கட்தொகை அடிப்படையிலும் தமிழர்கள் பக்கமே நியாயாம் இருந்தது. எனினும் ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னரே சென்னையை மீட்க முடிந்தது.

அதுபோல, மாநிலம் பிரிக்கப்படும்போது, வடிகால் போன்றவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், அது கணக்கில் கொள்ளப்படாமல், தமிழர்கள் கணிசமான அளவு இருந்தபோதும், கொல்லாகல் பகுதி மெட்ராஸ் மாகாணத்திலிருந்து எடுக்கப்பட்டு மைசூருடன் சேர்க்கப்பட்டது. இன்று காவிரி பிரச்சனைக்கு இது ஒரு முக்கிய காரணம்.

தெற்கு எல்லை

தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு அப்போது திருவிதாங்கூர்-கொச்சியில் இருந்தது.

அகத்தீஸ்வரம், விளவங்கோடு, கல்குளம், தோவாளை, நெய்யாற்றங்கரை ஆகிய தாலுக்களில் தமிழர்களே பெரும்பாண்மை. மார்ஷல் நேசமணி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர்கள் கட்சியான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியே தொடர்ச்சியாக வென்றும் வந்தது. எனினும் 16 உயிர்களை இழந்தது தான் குமரி முனைக் கிடைத்தது. அப்போதும் நெய்யாற்றங்கரை கேரளத்துடன் இணைக்கப்பட்டது.

1956 3 நபர் மொழிவாரி பிரிப்புக் குழுவில் கேரளத்தவரான கே எம் பணிக்கர் இருந்தார். மற்றொரு உறுப்பினரான பசல் அலி தன் சொந்த மாநிலமான பீகார் பிரிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்தார். ஆனால், பணிக்கரோ, முழுக்க முழுக்க கேரளா ஆளாகவே செயல்பட்டார்.

 


மேற்கு எல்லை

இதனால், செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதி தமிழர் பெரும்பாண்மை இருந்தும் பறிபோனது.

பாலக்காடு அருகே இருக்கும் சித்தூர் தாலுகாவிலும் 95% தமிழர் இருந்தும் கிடைக்கவில்லை.

தேவிகுளம் பீர்மேடு கதை இன்னும் சோகம். அங்கு இப்போது கூட தமிழரே பெரும்பாண்மை. 2021 தேர்தலில் வெற்றி பெற்றவர் கூட தமிழரே. ஆனால், தமிழகத்துடன் இணைக்கப்படவில்லை. அதற்கு பணிக்கர் சொன்ன காரணம், தமிழர்கள் கூலி வேலை செய்யும் நாடொடிகள் அவர்களைக் கணக்கில் கொள்ள முடியாது என்றார். உண்மையில் 1885 வரை இடுக்கி மாவட்டம் செல்ல கம்பம் பகுதியில் இருந்து மட்டுமே வழியிருந்தது. அங்கு பெரும்பாண்மை நிலமும் தமிழ் அரசர்களான பூஞ்சார் அரசர்களிடமே இருந்தது. இவ்வளவு இருந்தும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காமராசர் கமிட்டி முடிவை ஏற்றுக்கொண்டு கேரளாவுடன் கையெழுத்திட்டு வாரி வழங்கிவிட்டார்.

ஊட்டி, கூடலூரையும் கேட்டார்கள். எப்படியோ தப்பிப் பிழைத்தது. காமராசர் அதையும் கொடுக்காமல் விட்டது ஆச்சரியம் தான்.

கிழக்கு எல்லை

கிழக்கில் கடல்தான் பிரச்சனை இல்லை என்று பார்த்தால், அங்கும் பிரச்சனை. 1962 இல் பிரஞ்சு இந்தியப் பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட போது, புதுச்சேரி காரைக்கால் பிரச்சனை வந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், நியாயப்படி, சிறப்பு அதிகாரங்கள் கொண்ட தன்னாட்சிப் பகுதியாக புதுச்சேரி தமிழகத்துடன் தான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தனி மாநிலமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ஒன்றிய அரசு தன் பிரதேசமாக எடுத்துக் கொண்டது அநீதி. ஒன்றிய பிரதேசங்கள் எல்லைப்புற பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் மட்டுமே அப்போது இருந்தது. அல்லது சண்டிகர் கோவா போன்று சிக்கலான பகுதிகளில் இருந்தது. ஆனால் எந்த இழுபறியும் இல்லாமல், புதுச்சேரியை ஏன் ஒன்றியம் எடுத்துக் கொண்டது என புரியவில்லை. நேரு சென்னையை ஒன்றிய பிரதேசமாக்க முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது உண்மை



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..