டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன?
டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன?
மோடி தலைமையிலான இந்திய
அரசானது, டிஜிட்டல் இந்தியா எனும் முழக்கத்துடன்
அதிகாரத்தைப் பரவலாக்கும் வண்ணம் (Power to Empower),
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இணையதள சேவை மூலம் நாட்டின் வளங்களை மேம்படுத்த,
சேவை ஆற்ற உறுதி பூண்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் அதிகாரப்பரவல் மூலம் சமூகம்
மற்றும் பொருளாதரத்தில் அறிவு சார் நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவது என்பது இந்த
திட்டத்தின் நோக்கமாகும்.
இணையத் தள சேவை மூலம்
பல்வேறு துறைகளை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம்
கீழ்க்கண்டவாறு அமைய உள்ளது.
- பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, குறிக்கோளை அடைதல்,
- சிறு செயல் திட்டங்கள் சிறந்து விளங்கினாலும், பொதுவான குறிக்கோளை எதிர்நோக்கல்,
- தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு துறை DeitY (Department of Electronics and Information Technology) மூலம் அரசின் மற்றத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்
- அனைவரும் ஒருங்கிணைந்து திட்டனங்களை வெளிப்படையான அணுகுமுறையில் செயல்படுத்துவதன் மூலம் குறிக்கோளை அடைதல்.
இந்த டிஜிட்டல் இந்தியா செயல் அமைப்பின் மூலம், ஏற்கனவே செயல்பட்டு
வரும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை இதன் கீழ்க் கொண்டுவர ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதன் நோக்கங்களாக மூன்று முக்கியத் துறைகளில் (Vision of Digital India) கவனம் செலுத்த உள்ளது.
- நாட்டின் அனைத்து குடி மக்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தித் தருவது,
- தங்களுக்குப் பயனளிக்கும் அல்லது தேவைப்படும் சேவைகளை தாங்களே இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை (Governance & Services on demand)
- இந்திய குடிமக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சேவை மூலம் அதிகாரம் அளித்தல் (Digital empowerment of Citizens). எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்று அதிகாரம் பரவலாக்கல்.
தற்போது
முதலாவது டிஜிட்டல் சேவை மூலம் நாட்டின் அனைத்துக் குடி மக்களுக்கும் என்னென்ன
கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தரும் என்று பார்த்தால், அதிவேக இணையத் தள சேவையை படிப்படியாக
வழங்குதல், மக்கள் அனைவருக்கும் ஒரே குறியீடு எண் மூலம் அனைத்து நலத்
திட்டங்களையும் வழங்கும் வகையில் சேவை வழங்குதல் (உதாரணம் ஆதார் அட்டை எண் போன்றது),
வங்கி சேவைகளுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் வடிவமைத்தல், அனைவரும் எளிதில் தொடர்பு கொள்ளும்
வகையில் அரசின் துறைகளை இணையத் தள மூலம் உருவாக்கல், பாதுகாப்பான தகவல்
தொழில்நுட்பம் மூலம் சேவைகளை விரிவாக்குதல் ஆகியன.
இரண்டாவதாக, தங்களுக்குப் பயனளிக்கும் அல்லது தேவைப்படும் சேவைகளை
தாங்களே இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை மூலமாக, அரசுத் துறைகள் அனைத்தும் தகவல்களை ஒன்றுக்கொன்று பரிமாற்றம்
செய்து கொள்ளும் வகையில் சேவை மனப்பான்மை குடிமக்களுக்கு எளிதில் கிடைக்கும்
வண்ணம் ஒருங்கிணைத்தல், ஆன்லைன் எனப்படும் இணையச் சேவை மற்றும் கைபேசி சேவையில்
அனைத்து விண்ணப்பங்களும் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் நோக்கிலும்,
பணபரிமாற்றம் எலக்ட்ரோனிக் பரிவத்தனை மூலம் மேற்கொள்ளும் வகையில் இதன் மூலம் கள்ள
நோட்டுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொருள்கள் மீதான வரிகள், சலுகைகள்
அரசுக்குக் கிடைக்கும் வகையில் உருவாக்குதல் ஆகியன இதன் பார்வையாகும்.
மூன்றாவதாக,
டிஜிட்டல் சேவை மூலம் அதிகாரம் அனைத்துக் குடிமக்களுக்குப் பயனுறும் வகையில், டிஜிட்டல்
தொழில் நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மேலும் நகரங்கள் மட்டும் அல்லாது கிராம
மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சேவையை, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிடைக்கச்
செய்தல் ஆகியன இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த
டிஜிட்டல் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவின் ஒன்பது தூண்களைக் கட்டமைத்துக்
கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இணையத் தளத்தில் அகண்ட சேவை (Broadband Highways)
- ஸ்மார்ட் கைபேசி (Mobile Phone) அனைவருக்கும் குறைந்த வகையில் கொடுக்கும்
திட்டம். மேலும், அதன் மூலம் சுமார் 42,300
கிராமங்களுக்கு இணைய சேவை அளிக்கும் திட்டம்.
- பொது இடங்களில் இணையத் தளபயன்பாடு அதாவது அஞ்சலகங்கள் மூலம் தகவல்
தொழில் நுட்ப சேவைகளை விரிவாக்குதல்.
- அரசின் விண்ணப்பங்கள், திட்டங்கள் அனைத்தும் மின்னணு தொழில் நுட்ப
திட்டத்தின் மூலம் அனைவரும் கையாளும் வகையில் மேம்படுத்துதல், விண்ணப்பங்கள்
பரிசீலனை எந்த அளவிற்கு உள்ளது என்று தெரிந்துகொள்ளுதல்.
- ஈ.கிராந்தி (eKranti) எனும் மின்னணு சேவைகள் மூலம், தாங்கள் விண்ணப்பித்த விவரம் மற்றும்
அதன் இறுதி வடிவம் பயனாளிக்குத் தெரிவித்தல். இந்த மின்னணு சேவைகள் கல்வி,
சுகாதாரம், திட்ட மதிப்பீடு, விவசாயம், இணையத்தளப் பாதுகாப்பு, வங்கிகளில்
பணப்பரிவர்த்தனம், நீதி மன்றத் தொடர்பில் காவல் துறை, சிறை செயல் பாடுகள் ஆகியவற்றில்
வெளிப்படையான நடவடிக்கைகள்,
- அரசின் திட்ட தொடர்பான அனைத்து செய்திகளும் மக்களுக்குத் தெரியும்
வகையில் பணியாற்றுதல். அதாவது, பொதுமக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியைக்
குறைத்தல். இதன் மூலம் இலஞ்ச லாவண்யமற்ற ஒளிவு மறைவு இல்லாத நடைமுறையை
மேம்படுத்துதல் ஆகியன.
- மின்னணுத் துறையில் நம் நாட்டின் வளங்களை மேம்படுத்தி அதன் மூலம்
உற்பத்தித் திறனை வளர்த்து, இனி வரும் ஆண்டுகளில் இறக்குமதியை முற்றிலுமாக
குறைப்பது. கை பேசி, மருத்துவ உபகரணங்கள், செட் அப் பாக்ஸ், கணினி உள்ளிட்ட
அனைத்து மின்னணு சாதனங்கள் நம் நாட்டிலேயே தாயாரித்தல்,
- இதற்காக தகவல் தொழில் நுட்பத் துறையில் பல வேலை இடங்களை உருவாக்குதல்,
- மேற்கண்ட பலன்களை உடனே அறுவடை செய்யும் நோக்கில் முதல் கட்டமாக சுமார்
ரூ. 960 கோடி செலவில், நாட்டில் உள்ள அனைத்துக் பல்கலைக் கழகங்களில் அகண்ட
இணைய சேவையை உருவாக்குதல், நாட்டின் பல்வேறு துறைகளில் ஈமெயில் மூலம் தகவல்களை அனுப்ப
வசதியாக பணியாற்றுதல் மேலும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்தல் ஆகியன முதல் கட்ட
முயற்சியாக டிஜிட்டல் இந்தியா செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்த அமைப்பில், நாட்டின்
பிரதமர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் கல்வி
அமைச்சர் ஆகியோர் தலைமையின் கீழ் நாட்டின் முக்கியப் பொறுப்பில் உள்ள திட்டக்குழு
அதிகாரிகள், செயலாளர்கள் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக