சுற்றுலா காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரலாறு..

காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும்.


ஏரிகள் நிரம்பி உள்ளதால் இந்த மாவட்டம் ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் என்னவோ, தமிழ் நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்று காஞ்சிபுரம் மாவட்டம் அழைக்கப்படுகிறது. இங்கு மட்டும் சுமார் 912 ஏரிகள் உள்ளன. 

Image result for காஞ்சிபுரம்


பல்லவர்கள்..
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.
பல்லவர் நாடு..



பல்லவர்களுக்குப் பின்னர்..

சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது. 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.

1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.
எல்லைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.

வழிபாட்டுத்தலங்கள்

  • காஞ்சி கைலாசநாதர் கோவில்
  • வைகுந்தப் பெருமாள் கோவில்
  • ஏகாம்பரேஸ்வர் கோவில்
  • வரதராஜப் பெருமாள் கோவில்
  • காமச்சியம்மன் கோவில்
  • குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள்,
  • அச்சிறுப்பாக்கம்
  • குன்றத்தூர்
  • திருவிடைச்சுரம்
  • திருப்போரூர்
  • திருமாற்பேறு
  • திருவான்மியூர்
  • திருக்கழுக்குன்றம்
  • திருமேற்றளி
  • திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள்,
  • மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள்
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்

கைலாசநாதர் கோயில்
இந்த சிவன் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் ராயசிம்ம பல்லவன் கட்டினான். பிறகு 8-ஆம் நூற்றாண்டில் கோயிலின் முகப்பு மூன்றாம் மகேந்திர வர்மனால் கட்டப் பட்டது. இது ஆரம்பகால திராவிட கட்டிடக் கலையின் புதுமையும் எளிமையும் பிரதிபலிக்கும் கோயிலாகும். இதன் கட்டிடக்கலை மகாபலிபுரக் கோயில்களை ஒத்திருக்கிறது. பல நடன மாந்தர் நடுவே சிவனும் பார்வதியும் ஆடும் போட்டி நடனச் சிற்பங்கள் காணத் தக்கவை. இக்கோயிலின் எதிரே இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலகம் அமைந்திருக்கிறது.

Image result for கைலாசநாதர் கோவில்
வைகுந்தப் பெருமாள் கோவில்
இந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி வர்மனாலும் கட்டப்பட்டக் கோயிலாகும் இது. கைலாச நாத கோயில் கட்டியப் பின்னரே இது கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உருவாக, இக்கோயிலின் சிங்கமுகத் தூண்களது வடிவமைப்பே தூண்டுகோலாய் அமைந்தது.
ஏகாம்பரேஸ்வர் கோவில்
இது சிவன் கோயிலாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களிலேயே பெரிய கோயிலாகும். 9 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. இதன் கோபுரத்தின் உயரம் 59மீ (192 அடி). பல்லவர்களும், அவர்களை அடுத்து சோழர்களும் இக்கோயிலைக் கட்டி முடித்தனர். இக்கோயிலைச் சுற்றி உயர்ந்துள்ள கல் மதில்சுவரை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் 1509-இல் கட்டினார். கோயிலின் உள்ளே 5 தனித்தனி பிரகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. ஏக அமர நாதர் (மாமரக் கடவுள்) என்பதே ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயராக வழங்குகிறது. இங்குள்ள மாமரத்தின் நான்கு கிளைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகும். தலவிருட்சமான இந்த மாமரத்தின் வயது 3500 ஆண்டுகள் ஆகும்.

வரதராஜப் பெருமாள் கோயில்
காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் தூணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது. இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் அமைந்துள்ளன.

காமாட்சியம்மன் கோவில்
பார்வதிக்கு (காமாட்சி) அர்ப்பணிக்கப்பட்ட இச்சிறு கோவில் 14-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. வடிவில் சிறியதென்றாலும் இக்கோவில் இந்தியா முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்தியாவில் சக்தியை வழிபடும் மூன்று இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மற்ற இடங்கள் மதுரையும், வாரணாசியும் ஆகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் 9-ஆம் பிறை நாளில் இங்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

குமரக்கோட்டம்
கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வழிபட்டு அருள் பெற்ற இடம். காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்தில் எங்கு சென்றாலும் கோயில்கள் உள்ளன. இந்தியாவிலேயே கோயில்கள் நிறைந்த நகரம் இதுவே ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வெள்ளித் தேர்த் திருவிழாவும், மாவடி சேவை, கருடச் சேவை விழாக்களும் மிகச் சிறப்புடையன.



இறவாதீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோவில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி. 700-728 ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. 


அச்சிறுபாக்கம்
இது சிவன் கோயில். பாண்டிய அரசன் ஒருவன் கங்கையின் மணலை வண்டியில் கொண்டு வந்தபோது, இவ்வூர் அடைந்ததும் வண்டி மேற்கொண்டு செல்ல முடிய வில்லை. அச்சு முறிந்தது. அப்போது அசரீரி கூறிய மொழியைக் கேட்டு, பாண்டியன் இக்கோயில் திருப்பணியைச் செய்து முடித்தான் என்பது வரலாறு. இவ்வாலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. கிழக்கில் பெரிய கோபுரம், கோபுர வாயிலுக்கு அப்பால் பானுதீர்த்தம், கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் கொடிமரமும் நந்தியும் சற்று வடக்கே தள்ளி அமைந்துள்ளன. கோபுரவாயிலுக்கு நேராக உமையாட்சி நாதர் என்னும் சிவலிங்கமும், மெல்லியலாள் என்னும் அம்மையும் இருக்கின்றனர். இவை பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டவை. இக்கோயில் சென்னை - விழுப்புரம் இருப்புப்பாதையில் சென்னையிலிருந்து தெற்கே 90கி.மீ. தொலைவில் உள்ளது.

திருப்போரூர்
இக்கோயில் சிதம்பர அடிகள் இயற்றிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்னும் நூலால் பாரட்டப்படுகிறது. சிதம்பர அடிகளாலும், அவருக்குப் பின் வந்த அடியார்களாலும் வளர்க்கப் பெற்ற கோயில். சென்னைக்குத் தெற்கே 43 கி.மீ. தொலைவில் உள்ளது.
குன்றத்தூர்
சேக்கிழாரடிகள் பிறந்த ஊர். அவர் அமைத்த சிவன் கோயிலும் இங்குள்ளது. திருநாகேச்சுவரம் என்ற பெயரோடு திகழும் இவ்வூரின் மலைமேல், முருகப் பெருமான் விளங்குகிறார். சென்னைக்குத் தென்மேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குக் கண்டெடுத்த புதைப்பொருள்களால் இது நாகரிகம் பெற்றிருந்த ஊர் என்பது தெரிகிறது.
திருமாற்பேறு
சிவன் கோயில் உள்ள இத்திருவூரில் நொடிப் பொழுது தங்கு வோருக்கும் முக்தி கிடைக்கும். கூப்பிய கரங்களுடன் திருமால் இறைவர் திரு முன்பு காணப்படுகிறார். திருமாற்பேறு இரயில் நிலையம் பள்ளூர் என்னும் ஊரில் இருக்கின்றது. காஞ்சிக்கு வடமேற்கில் 11 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 100 மலர்களால் சிவனை அர்ச்சிக்கத் திருமால் முயலுகையில் ஒரு மலர் குறைந்தபோது, தம் கண்ணையே மலராகப் பிடுங்கி 100வது மலராக்கி அளித்து வழிபட்டாராம். இதைச் சித்திரிக்கும் சிற்பமும் அங்குள்ளது.
திருவான்மியூர்
வான்மீக முனிவர் பூசித்த தலம். இலிங்கம் சற்று வடபுறம் சாய்ந்துள்ளது. பசுவானது பால் சொரிந்து அபிடேகம் செய்த பொழுது அதன் காற்குளம்பு பட்ட வடு காணப்படுகிறது. மேலை கோபுர வாயிலில் வான்மீகருக்குத் தியாகராசர் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் நடனக் காட்சியளிக்கிறார். அந்த நடனம் கோயிலைச் சுற்றிலும், வீதிகளிலும் நடைபெறுகிறது. வடமேற்கில் வான்மீகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடக்கே பாம்பன் குமரகுருதாச அடிகள் கற்குகையும் திருமடமும் உள்ளன. இத்திருத்தலம் சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கில் கடற்கரையில், 5கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்கழுக்குன்றம்
கழுகுகள் வழிபட்டுப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுக் குன்றம் எனப் பெயர் பெற்று, பின்னர் கழுக்குன்றம் என்றானது. வடநாட்டினர் இவ்வூரைப் 'பட்சி தீர்த்தம்' என்பர். 'கதலிவனம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்குண்டு. இந்நாளிலும், இம்மலைமேல் இரண்டு கழுகுகள் வந்து நண்பகலில் குருக்கள் அளிக்கும் நெய், சக்கரைப் பொங்கலை உண்டு செல்கின்றன. இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு ஒன்று பிறக்கிறது. இப்பொழுதும் அப்படி நடைபெறுகின்றது. நெடுங்காலமாக அவ்வாறு பிறந்த சங்குகளையெல்லாம் சேர்த்து கோயிலில் வைத்துள்ளனர். இம்மலையைச் சுற்றி வர 3 கி.மீ. தொலைவுப் பாதை உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரை நகரம் இங்கிருந்து 14 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றுகளில் கல்லுடைத்து வெளிநாட்டுக்குக் கல் ஏற்றுமதி செய்கின்றனர்.
திருமாகறல்
இராசேந்திர சோழ மன்னன் துரத்திய உடும்பு இறைவன் திருமேனியில் காணப்படுகின்றது. உடும்பு தழுவிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இங்கு திங்கட்கிழமை வழிபாடு சிறப்புடையது. மக்கட்பேறு வேண்டுபவர் இந்நாளில் வந்து வழிபடுவர். காஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்குரங்கணின் முட்டம்
குரங்கும் அணிலும் காக்கையும் பூசித்த ஊர் என்பதால் இப்பெயர் வந்தது. இக் கோயில் வாயிலின் வடப்பக்கமும் தென்பக்கமும் குரங்கு, அணில், காக்கை இவை வழிபட்ட முறைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. காக்கை மடு என்பது கோயிலைச் சுற்றியுள்ளது. காக்கை, மூக்கால் கீறிய மடுவாதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்குத் தெற்கில் 10கி.மீ. தொலைவிலும், தூசி என்னும் ஊருக்குத் தென்கிழக்கில் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இளையனார் வேலூர்
இக்கோயிலில் வேல் கருவறையுள் நிலைநாட்டி வணங்கப்படுகிறது. முருகப்பெருமான் இளமைக் கோலத்துடன் திகழ்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருப்பெரும்புதூர் கோயில்
இவ்வூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகப் பிரசித்தமானது. இதன் மண்டபங்கள் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை. இதன் வைணவத்தைப் பரப்பிய இராமனுஜர் கோயில் உள்ளது. இராமனுஜர் பிறந்த இடமும் இதுதான். இக்கோயிலின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால் ஆனவை. மேலும் இங்கு ஸ்ரீ ஆண்டாள், சக்கரவர்த்தித் திருமகன், வேணுகோபாலன், நம்மாழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இது சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தலமாகும். இங்குள்ள சிவன் கோயில் பழமையானது. நந்திவர்ம பல்லவன் அமைத்த சிங்கத் தூணும், அவனது உருவச்சிலையும் இக்கோயில் மண்டபத்தில் உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜஂவ் காந்தியின் நினைவிடம் இங்குள்ளது.
மேல்மருவதூர் ஆதிபராசக்தி
செங்கற்பட்டுக்கும் அச்சிறுவாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. தவத்திரு பங்காரு அடிகளார் இக்கோயிலை உருவாக்கினார். இவர் பல ஆன்மீக மாநாடுகளை நடத்தியுள்ளார். இக்கோயிலில் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்பக்தர்களும் ஆண் பக்தர்களும் சிவப்பாடை அணிந்து சக்தியை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத முறையில் இங்கு வரும் ஒவ்வொருவருமே அர்ச்சராக இருந்து வழிபடலாம். தமிழ்நாட்டின் பலபாகங்களிலிருந்து கால்நடையாகவே இங்கு வந்து சக்தியை வழிபடுகின்றனர். இங்கு ஆடிபூரத்திருவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஒரு பொறியியல் கல்லூரி ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தாரால் நடத்தப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்வி வளத்திற்கு புகழ் பெற்றது. உயர்நிலைப் பள்ளிகளும், கலைக்கல்லூரிகளும், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளும், வடமொழிக் கல்லூரிகளும், தொழில் நுட்ப கல்லூரிகளும் உள்ளன. மகாபலிபுரத்தில் சிற்பக் கலைக் கல்லூரி உள்ளது. இசை, நடனம் கற்பிக்க திருவான்மியூர் கடற்கரையோரம் கலாஷேத்திரம் அமைந்துள்ளது. மேலை நாடுகளிலிருந்தும், கீழை நாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்கு வந்து பயில்கின்றனர். தாம்பரத்திலுள்ள சிவானந்தா அனாதை இல்லத்தில பத்து வயத்திற்கும் குறைந்த அனாதைச் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு தொழிற்கல்வி பெறுகின்றனர். காஞ்சிபுரத்தில பக்தவச்சலம் பாலிடெக்னிக்கும், குரோம்பேட்டையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனமும், சிறுதொழில் கல்வி நிலையங்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

சுற்றுலா தலங்கள்

  • மாமல்லபுரம்
  • காஞ்சிபுரம்
  • வேடந்தாங்கல்
  • கரிக்கிலி
  • வி.ஜி.பி. தங்கக் கடற்கரை
  • திருக்கழுக்குன்றம்
  • வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா
  • காஞ்சிபுரம் அண்ணா நினைவகம்
ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.

முக்கிய ஊர்கள்





மகாபலிபுரம்
  • மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். பல்லவர் காலத்தில் இது முக்கிய வணிகத் துறைமுகமாக விளங்கியது. இங்குள்ள குடைவரைக் கோயில்களையும் சிற்பங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்றனர். பலவித சிற்பக் கலைச் செல்வங்களை இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்கித் தருகிறார்கள். சிற்பக்கலைப் பயில தனியே ஒரு கல்லூரியும் இங்குள்ளது. இவ்வூர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. மகாபலிபுரம் எனும் பழையத் துறைமுகத்தை 7-ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் உருவாக்கினான். என்றாலும், முதலாம் நரசிம்மவர்ம மாமல்லன் நினைவாக இக்கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்றழைக்கப்பட்டது. இதுவே இப்போது மருவி மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில்தான் இருக்கிறது. மகாபலிபுரத்தில் பல அபூர்வச் சிற்பங்கள் கலையழகு மிளிரக் காணப்படுகின்றன.
  • மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதல்முதல் பார்ப்பவை ஒரு பெரும்பாறையும், அதில் வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே. இந்தச் சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். தொண்ணூறு அடி நீளமும் முப்பதடி உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் நூற்றைம்பது சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன. தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் இவற்றையும் உயிர்ச்சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாகப் பாறையைப் பிரிக்கிறது. வடக்கு பாகத்தில் சிவப்பிரானையும், தவக்கோலத்தில் நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும், கீழே சிறு விஷ்ணுகோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிருள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுருவில் பொறிக்கப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.
  • மான் ஒன்று தன் பின்னங்காலால் முகத்தை சொறிந்து கொள்ளும் காட்சி, துறவி மார்பு எலும்புத் தெரியத் தவம் செய்யும் கோலம், வேறு சில பிராணிகளின் அழகு, யானைகளின் கம்பீரத் தோற்றம் இவையெலாம் பார்ப்பவரின் மனம் கவரும் சிற்ப காட்சிகள். பஞ்சபாண்டவர் மண்டபம் சிங்கச் சிற்பங்கள் தலைப்பகுதியில் அமைந்த ஆறு தூண்களோடு காட்சியளிக்கிறது. அடுத்து பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம்.
  • இந்திரன் கோபங்கொண்டு கடும்மழை பொழியச் செய்து ஆயர்பாடியில் இருப்பவர்களுக்குத் தொல்லை தருகிறான். அதைத் தடுக்க கிருஷ்ண பிரான் கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த காட்சியை இதன் சுவரில் வடித்திருக்கிறார்கள். இதன் அடியில் கோபாலர்கள் அமைதியாகத் தங்கள் அலுவல்களைக் கவனித்து வருகிறார்கள். ஒருவன் பால் கறக்கும் காட்சி விநோதமாயிருக்கிறது.
  • பசு தன் கன்றை நக்கிக் கொடுப்பது தத்ரூபமாய் இருக்கிறது. குட்டியுடன் இருக்கும் பெண்குரங்குக்கு ஆண்குரங்கு பேன் எடுக்கும் சிலை அமைப்பு கண்ணைக் கவர்கிறது. குன்றின் மேல் ஏறும் போது ஒரே பாறையில் இரண்டு அடுக்குகளுடன், மேலே ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்ட்ட கணேசரதம் காணப்படுகிறது. குன்றின் வடகோடியில் யானை, மான், குரங்கு, மயில் முதலிய சிற்பங்களைக் காணலாம்.
  • அடுத்து வடமேற்கில் த்ரிமூர்த்தி மண்டபம் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்பகிருகங்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. த்ரிமூர்த்தி மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் கோடிக்கல் மண்டபம் இருக்கிறது. இதில் பெண் துவராபாலிகைகள் கழுத்தில் சிறுமாலையுடனும், வில்லைத் தாங்கியபடியும் கம்பீரமாக நிற்கிறார்கள்.
  • சற்று தெற்கே போனால் வராக குகை மண்டபத்தைக் காணலாம். இதன் உட்பக்கச் சுவர்பாறையின் இடதுபுறம் வராக அவதாரச் சிற்பத்தை வடித்திருக்கிறார்கள். பூமியைக் கவர்ந்துச் சென்ற அரக்கன் கைகூப்பிக் கிடக்கிறான். திருமால் வராக வடிவம் எடுத்து லட்சுமியைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் வணங்குகிறார்கள். இதற்கு எதிர்சுவரில் மகாபலியின் கர்வத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பம் இருக்கிறது.
  • விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கியிருக்கிறது. கீழே மகாபலி வியப்பும் அச்சமும் தோன்ற அமர்ந்திருக்கிறான். அடுத்து மகிஷாசுரமர்த்தினியாகச் சிங்கத்தின் மேல் ஏறி எருமைத் தலை அரக்கனோடு போர்புரியும் காட்சி அமைந்திருக்கிறது. இதற்கு எதிராகச் சாந்தமாய் ஐந்துத்தலை நாகத்தில யோக நித்திரை செய்கிறார் திருமால். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவர். இப்படி இந்த ஒரு மண்டபத்திலேயே ரெளத்திரத்தை காட்டும் சிற்பத்துக்கு எதிரில் சாந்தமே உரு எடுத்த கோலத்தையும் காணலாம்.
  • சற்று தெற்கே போனால் இராமானுஜ மண்டபம் இருக்கிறது. ஆனால் இது இராமானுஜரின் காலத்துக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. இதில் உள்ளத் தூண்களை நிமிர்ந்து அமர்ந்த சிங்க உருவங்கள் தாங்குகின்றன. இதையடுத்து குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. இது முன்பு கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இது ஓலக்கணீசர் என்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில். இதையடுத்து முற்றுபெறாத ராயகோபுரம் ஒன்று இருக்கிறது. இனி கீழிறங்கி நடந்தால் குன்றுக்குத் தெற்கே பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் உள்ள இடத்துக்குப் போய்ச்சேரலாம். இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல் சிங்கம் ஒன்றும், அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை.
  • குடிசைபோல் அமைந்திருக்கும் சிறிய கோயில் திரெளபதி ரதமாகும். இதன் அடிப்புற மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பக்கிருகத்தின் உள்பகுதியில் துர்க்கை உருவம் பின் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதை காணலாம். தாமரை மலரின் மேல் நிற்கும் கோலம், தலையில் கரண்ட மகுடம், காலடியில் இரண்டு மனிதர்கள் மண்டியிட்டிருக்கிறார்கள், ஒருவன் தலையை அறுத்திடும் காட்சி, வெளிப்புறம் இரண்டு துவாரபாலிகைகள் வில் பிடித்து நிற்கிறார்கள். துர்க்கையினுடைய இந்த விமானத்தின் முன்னால் சிங்க உருவம் நிற்கும் விதமாய் செதுக்கப்பட்டுள்ளது.
  • திரெளபதி ரதத்திற்கு தெற்கே உள்ள கோயில் அர்ஜுனரதம். பழங்காலத்தில் செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு செய்த கோயில்களின் அமைப்பையொட்டி இரண்டு நிலை மாடத்துடன் செதுக்கப்பெற்றிருக்கிறது. முன்புறத்து அர்த்த மண்டபத்தை சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதன் வெளிப்புறச் சுவரில் அழகான தூண்களும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களும் அமைந்திருப்பதைக் காணலாம்.
  • முன்பாகம் தவிர மூன்று புறச் சுவர் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. வடபுறம் மகா விஷ்ணுவையும் அவரருகில் கருடாழ்வானையும் பார்க்கலாம். இதையடுத்து ஓர் அரசனும் அரசியும் நிற்கிறார்கள். கிழக்குப்புறச் சுவரின் நடுவில் யானையின் மேல் அமர்ந்திருக்கும் இந்திரனையும், தெற்குச் சுவரில் ரிஷபத்துடன் சிவபிரானையும் காணலாம். அடுத்து நீண்ட சதுர வடிவில் அமைந்த கோயிலைப் பீமரதம் என்கிறார்கள். படகை கவிழ்த்து வைத்த மாதிரி மேல் பகுதி அமைப்பும், நாலுபக்கமும் சிங்கத் தூண்களும் தாழ்வாரங்களும் கொண்டது இது. இது திருமாலுக்காக ஏற்பட்ட ஆலயம்.
  • தெற்கு கோடியில் நாற்பதடி உயரமுள்ள கோயில் தர்மராஜ ரதமாகும். இது மூன்று அடுக்கு கொண்டது. கீழ்ப்பகுதியில் கர்ப்பகிருகம் செதுக்கப் பெறவில்லை. ஆனால் அதற்கு மேல் ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு கர்ப்பகிருகங்களும், சுற்றிலும் பிரகாரங்களும், நாற்பத்திரண்டு அழகிய சிற்பங்களும் இருப்பதைக் காணலாம். இரண்டாவது கர்ப்ப கிருகத்திலிருந்து மேலே போக படிகள் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இவற்றில் பல சிவபிரானின் திருவுருவங்கள்.
  • கிழக்குக் கோடியில் அவரே அர்த்த நாரீசுவரராகவும் விளங்குகிறார். அவரருகில் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இப்படி சிறப்பான அமைப்புள்ள கற்கோயிலை வேறு எங்கும் காண முடியாது. மேல்பகுதி சிவபிரானுக்கும், நடுபகுதி விஷ்ணுவுக்கும் கீழ்ப்பகுதி பிரம்மாவுக்குமாக ஏற்பட்ட திமூர்த்தி கோயில் இது. மேற்கண்ட நான்கு ரதக் கோயில்களுக்கும் முன்னால் உள்ள சிறுகோயில் சகதேவ ரதம்.
  • இதன் வெளிப்புறத்தில சிற்பங்களே இல்லை. இது எந்த தெய்வத்துக்காகவும் அமைக்கப் பெற்றதில்லை. இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வணங்குவதாக கொண்டு அமைத்த கோயிலாக இது இருக்க வேண்டும். அவனது வாகனம் ஐராவதம் என்ற யானை. அதுவும் பின்னால் இருக்கிறது. இந்த விமானத்தின் அமைப்பும் யானையின் பின்புறத்தை ஒத்தது.
  • தமிழில் இந்த வகை கோயில் அமைப்பை துங்கானை மாடம் என்றும், வடமொழியில் கஜ ப்ருஷ்டம் என்றும் சொல்வார்கள். இனி இந்த ஊரில் வந்த வழியே திரும்பிச் சென்றால் பார்க்க வேண்டியது புகழ் பெற்ற கடற்கரைக் கோயில். அலைமோதும் கடற்கரையில் கருங்கல்லினால் முதல் முதலாகக் கட்டியது இந்தக் கோயில்.
  • அலைகள் அடிப்பதாலும், உப்பங்காற்று வீசுவதாலும் இந்தக் கோயில் பழுது பட்டிருந்தாலும், இதன் அழகு சிறிதும் குன்றவில்லை. உயரமான விமானமும் அருகிலே சிறிய விமானமும் இரண்டு கோயில்களுக்கு ஏற்பட்டவை.
  • கடலை நோக்கியுள்ள கோயிலில் பெரிய லிங்கம் ஒன்றும், சோமாஸ்கந்தர் உருவமும் இக்கோயில் சிவபெருமானுக்காக அமைத்தது என்பதைக் காட்டும். இந்தக் கோயில்களின் முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய பிரகாரங்கள் இருந்தன.
  • கிழக்கே இருந்ததைக் கடல் கொண்டுவிட்டது. மேற்கே இருந்த பிரகாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மணல் மேடாக இருந்தது. மணலைத் தோண்டி மறைந்திருந்த சிற்பங்களைக் கண்டெடுத்து பல இடங்களில் வைத்து, ரிஷபங்களை வரிசையாக அமைத்து அழகு படுத்தியிருக்கிறார்கள், அரசாங்கத்தார்.
  • பழமையான பாடல் பெற்ற விஷ்ணுகோயிலில் வழிபாடு இல்லாத குறையை நீக்க, ஊர்நடுவில் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் ஒன்று அமைத்திருக்கிறார்கள். விருப்பம் உள்வர்கள் இங்கே வழிபாடு செய்து திரும்பலாம். இங்கிருந்து வடக்கே மூன்று மைல் தொலைவில் சளுவன்குப்பம் என்றொரு கிராமம்இருக்கிறது. அங்கே கடற்கரை யோரம் விசித்திரமான குகை ஒன்றைப் பார்க்கலாம். இதன் நடுவே ஒரு சிறு அறையுடன் மேடை ஒன்றும், அதற்கு மேல் அழகிய சிங்கச் சிற்ப வரிசையும் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இந்த மேடையில் அமர்ந்து பாடினாலும் பேசினாலும் நன்றாக ஒலிக்கிறது. இது பிரசங்க மேடையாக இருந்திருக்க வேண்டும். சிங்கச் சிற்பம் அமைந்த இக்குகைக்கு புலிக்குகை என்று தவறான பெயர் வழங்கி வருகிறது. மகாபலிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் முதலைப் பண்ணை இருக்கிறது. முதலைகளை இங்கு இனவிருத்தி செய்து வளர்க்கிறார்கள். எல்லா அளவிலும் முதலைகள் இங்கு இருக்கின்றன. புதுப்புது இன முதலைகளும் உள்ளன. மகாபலிபுரத்திலிருந்து சைக்கிளிலோ பஸ்சிலோ செல்லலாம்.
காஞ்சிபுரம்
  • ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புடைய காஞ்சிபுரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இப்போது காஞ்சியில் 126 கோயில்களே எஞ்சியுள்ளன. காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்கள் உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பகால சோழர்களுக்கும், பிறகு கி.பி. 6லிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரையிலுமான காலத்தில் பல்லவர்களுக்கும் காஞ்சிபுரம் தலைநகரமாய் விளங்கிற்று.
  • தற்போது மாவட்டத் தலைநகராய்த் திகழ்கிறது. இது போர்களை எதிர்கொண்டு, பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்த தொன்மையான நகரமாகும். இது சின்னக் காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் என இருப்பிரிவுகளைக் கொண்டது. பழைய காஞ்சி தமிழ் கற்பதற்கும், புத்த, ஜெயின், இந்து பக்தர்களுக்கும் மிக முக்கியத் தலமாக இருந்தது.
  • பற்பல அழகிய தொல்சிற்பங்களைத் தாங்கிய பழங்கோயில்கள் பல இவ்வூரில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகமாய் வருகின்றனர். இங்கு கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், குமரக்கோட்டம் ஆகியக் கோயில்கள் பிரசித்திப் பெற்றவை. புஷ்பேஸு ஜாதி (பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை), புருஷேஷு விஷ்ணு (ஆண்களில் சிறந்தவன் விஷ்ணு), நாரிகேஷு ரம்பா (பெண்களில் சிறந்தவள் ரம்பை), நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி) என்று பாணப்பட்டரின் சமஸ்கிருத ஸ்லோகம் கூறுகிறது. இங்கு அமைந்துள்ள சங்கராச்சாரியர் மடத்திற்கும், அண்ணா நினைவிடத்திற்கும் பலர் வருகின்றனர். காஞ்சிபுரம் வாணிபத்தாலும் நெசவினாலும் பெயர் பெற்ற நகரமாகும்.
  • குறிப்பாக இங்கு பட்டு நெசவு வெகு சிறப்பாகவும் மிகுதியாகவும் நடைபெறுகிறது. பட்டு நெசவாளர்கள் சுமார் 400 வருடங்களுக்கு முன்பே காஞ்சியில் குடியேறி பரம்பரை பரம்பரையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டுச்சேலை இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும். காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
வேடந்தாங்கல்
  • சென்னையிலிருந்து சுமார் 52 மைல் தொலைவில் வேடந்தாங்கல் பறவை சரணாலயம் உள்ளது. இவ்வூரில் உள்ள ஏரியின் இடையிடையே அடம்பு மரங்கள் அடர்ந்த தோப்பு காணப்படுகிறது. 50 ஏக்கர் நிலப்பரப்புடைய இத்தோப்பில் நூற்றுக்கணக்கான மரங்கள் செறிந்துள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் நீர் தேங்கியுள்ள இந்த ஏரித் தோப்பிற்கு நமது நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரமாயிரம் விதவிதமான நீர்பறவைகள் வந்து கூடுகின்றன.
  • வேடந்தாங்கலில் பறவை பரவலாக இருக்கும் காட்சி வேறெங்கும் காணவியலா கண்கொள்ளாக் காட்சியாகும். அக்டோபரிலிருந்து மார்ச் வரை, குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும், ஆயிரக்கணக்கான பறவைகள் (30,000க்கும் மேலாக) இங்கு வருகின்றன. காலை நேரமும் மாலையும் பார்க்கத் தகுந்த நேரங்களாகும். இவ்வாறு பறவைகள் இங்கு கூடுவது இருநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இக்காலத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாய் வருகின்றனர். வேடந்தாங்கல் ஏரி உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
கரிக்கிலி
  • வேடந்தாங்கலுக்கு வடமேற்கு திசையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள கரிக்கிலியில் இருக்கும் இரண்டு ஏரிகளும், 1975 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. இவ்வேரிகளில் கடப்பமரங்கள் நிறைய உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் பறவைகள் இங்கு வருவதால், வேடந்தாங்கலைப் போல் இங்கும் பறவைகள் சரணாலயம் உள்ளது.
வி.ஜி.பி. தங்கக் கடற்கரை
  • மகாபலிபுரம் செல்லும் பாதையில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில உருவாக்கப்பட்டுள்ளது, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை. இது உல்லாச பயணிகளின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்பும் பழமையும், புதுமையும் இணைந்து எழில் கொஞ்சும் விதமாய் அமைந்துள்ளது. அசையா மனிதன், கல்தேர், செயற்கை நீர்வீழ்ச்சி, ராஜமண்டபம், பாரதி மண்டபம், குழந்தைகள் விளையாட்டரங்கு, பயணிகள் குடில்கள், 1000 பேர் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கு, உணவு விடுதிகள், இடையிடையே வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் காட்சி என்று எல்லாமும் சுற்றுலா பயணிகளையும், உல்லாச பிரியர்களையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
கோவளம்
  • மகாபலிபுரத்திற்கும் சென்னைக்கும் இடையே அமைந்துள்ளது கோவளம் கடற்கரை. இங்குள்ள ஹோட்டல், பிஷெர்மென் கோ புகழ்பெற்றதாகும். இந்தக் கடற்கரை மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுவதால், இது வெளிநாட்டினர் விரும்பி வரும் சுற்றுலாத் தலமாகும்.
வண்டலூர்
  • தாம்பரத்திற்கு தெற்கில் உள்ளது இவ்வூர். கலிங்கப் போரில் வென்ற கருணாகரத் தொண்டைமான் பிறந்த ஊர். இங்கு ஒரு வைணவக் கோயில் உள்ளது. இங்கு உயிரியல் பூங்கா மிருக காட்சிசாலை அமைந்துள்ளதால் சுற்றுலா வாசிகளின் வருகை இங்கு அதிகம். இவ்வுயிரியல் பூங்காவில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகிலிருக்கும் தலைசிறந்த விலங்குகள், பறவைகள் யாவும் உள்ளதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இங்கு வருகின்றனர்.
கருங்குழி
1825 -ஆம் ஆண்டு வரை பழைய செங்கற்பட்டு மாவட்டத்தின தலைநகராய் இவ்வூர் இருந்திருக்கிறது. செங்கற்பட்டுக்கு தெற்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரிசி தயாராகி பல ஊர்களுக்கும் அரிசி போகிறது. பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவ்வூரில் கடுமையான போர்கள் நிகழ்ந்துள்ளன. பிரெஞ்சுக் காரர்களால் கட்டப்பட்டக் கோட்டை இங்கு சேதமுற்ற நிலையில் காணப்படுகிறது. பெரிய அகழி ஒன்றும் இக்கோட்டையில் உள்ளது. இக்கோட்டை யிலிருந்து, கருக்குழிக்கு 3கி.மீ. தொலைவிலுள்ள மலைப்பாளையம் கிராமம் வரை சுரங்கப்பாதை ஒன்றுண்டு.

சதுரங்கப்பட்டணம்
சத்ராஸ் என்று பறங்கியரால் அழைக்கப்பட்ட இவ்வூர் பாலாறு கடலுடன் சங்கமமாகும் இடத்தின் அருகே உள்ளது. டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையும் கல்லறையும் இங்குள்ளன. பல பிரிட்டிஷ்- பிரெஞ்சுப் போர்கள் இங்கு நடந்துள்ளன. விரல் அளவே பழம் கொண்ட ஒரு வகை வாழையினம் இங்கு மிகுதியாகப் பயிராகிறது. ஒரு குலையில் நிறையப் பழங்கள் இருக்கும்.

தாம்பரம்
சென்னைக் கடற்கரைக்கும் இவ்வூருக்கும் உள்ள மின்சார ரயில் தொடர்பால் வளர்ச்சி பெற்ற ஊர். வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது. புகழ் பெற்ற கிறித்துவக் கல்லூரி, விமானப் படையின் தரைப் பயிற்சி நிலையம், நுரையீரல் மருத்துவமனை ஆகியவை இங்குள்ளன.
திருமணி
இவ்வூரில் தொழுநோய் மருத்துவ நிலையம் உள்ளது.
History 1924 Lady Wellington Leprosy Sanatorium at Tirumani.
CLTRI (Central Leprosy Teaching and Research Institute) stands as an elegant testimony to the inexorable fight against leprosy. It started as “Lady Willigdon” leprosy sanatorium under contribution from the church of Scotland Mission in 1924 and  was taken over first by the Government of Madras in 1948 and then by the Government of India in 1955.

பல்லாவரம்

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய ஊர். பல்லவபுரம் என்றிருந்த பழைமைப் பெயர் பல்லாவரம் என்று ஆயிற்று. மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில் உள்ளது. தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள் வாழ்ந்த ஊராகும். இதற்கு அண்மையில் மலைச்சாரலில் கல்லுடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சுற்றுபுற ஊர்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. உயர் அழுத்த மின்சாரக் கருவிகள் செய்யும் இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனி உள்ளது. பல்லாவரம் மலையில் ராடார் நிலையம் இருக்கிறது. அதனருகில் உள்ள மசூதியில் நபிகள் நாயகம் உபயோகித்த மேல் சட்டை ஒன்று இருக்கிறது. இஸ்லாமிய திருநாள் மிலாடி நபி அன்று ஏராளமான முஸ்லீம்கள் அச்சட்டையைத் தரிசிக்க திரண்டு வருகிறார்கள்.
திருவான்மியூர்
பழஞ்சிறப்பு வாய்ந்த இவ்வூர் அடையாற்றின் அருகாமையில் உள்ளது. முதல் இராஜேந்திர சோழனின் கல்வெட்டும் காணப்படுகின்றது. சமயக்குரவர்கள் பாடிய ஊர். இசை, நடனம், கற்பிக்க இங்கு கலா ஷேத்திரம் அமைந்திருக்கிறது. திருவான்மியூர் அருகே பெசண்ட்நகரில் கட்டப்பட்டுள்ள அஷ்டலட்சுமி கோயில் மற்றும் வேளாங்கண்ணி கோவிலும் அனைத்துப் பகுதி மக்களையும் ஈர்த்து வருகிறது.
மாதவரம்
சென்னை நகரிலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் நிலையங்களும் பெரிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிவரும் மாதவரம் பால் பண்ணையும் உள்ளன. பால் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் உள்ளது.
மீனம்பாக்கம்
இவ்வூரில் வெளிநாட்டுப் பயண விமான தளமும், பின்னி பொறியியல் தொழிற் சாலையும் உள்ளன. சமணக் கல்லூரி இங்குள்ளது.
திரிசூலம்
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் போக்குவரத்துப் பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட இரயில் நிலையம் திரிசூலமாகும். இதற்கு அருகில் உள்நாட்டு விமான தளம் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள மூன்று மலைகளுக்கிடையில் அமைந்துள்ள திரிசூலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வாலாஜாபாத்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. நேர்த்தியான கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள இந்து மதப் பாடசாலை புகழ் பெற்றது.
தென்னேரி
இவ்வூர் காஞ்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. தொண்டைமான் இளந்திரையன் என்ற அரசனால் இங்கு வெட்டப்பட்ட ஏரி திரையன் ஏரி என வழங்கியது. இதுவே இப்போது தென்னேரி என மருவியுள்ளது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் பல இவ்வூரில் காணப்படுகின்றன.
மதுராந்தகம்
செங்கற்பட்டுக்குத் தெற்கில் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. உத்தம சோழன் என்ற மதுராந்தகச் சோழன் காலத்தில தோன்றிய ஊராதலின் இது இப்பெயரைப் பெற்றது. இங்கு வடமொழிக் கல்லூரியும், வேத பாடசாலையும் உள்ளன. இங்குள்ள ஏரி காத்தப் பெருமாள் கோவில் மிகுந்த புகழ் பெற்றது. இவ்வூர் ஏரி மிகப் பெரியது. மதுராந்தகம் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது.
செங்கற்பட்டு
தென்னகத்து இரயில் சந்திப்புகளில் முக்கியமானது செங்கற்பட்டு. சென்னைக்கு 36வது மைலில் உள்ளது. இங்கு பெரிய அரசினர் மருத்துவ மனை ஒன்றுள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகப் பழமையானது. இதில் சிந்தையைக் கரும் சிற்பங்கள் பல நிறைந்துள்ளன. இங்கு வைத்தே சோழ, பாண்டிய மன்னர்கள் முடி சூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள கோட்டை விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றது. இதில் இப்போது சீர்த்திருத்தப்பள்ளி ஒன்று நடைபெறுகிறது. இங்கு சாராய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
செய்யூர்
சேயூர் என்பதே செய்யூர் ஆயிற்று. இது மதுராந்தகத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்வெட்டுகளிலிருந்து, இவ்வூர் ஒரு காலத்தில் இசைக்கும் நடனத்திற்கும் சிறப்புப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
குரோம்பேட்டை
குரோம் லெதர் கம்பெனி இப்பகுதியில் தொடங்கப்பட்ட பிறகே குரோம்பேட்டை என வழங்கலாயிற்று. இங்கு தோல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கு பல்லவன் பஸ் பணிமனை ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. வரைபடம் (விணீஜீ) தயாரிக்கும் அச்சகம் ஒன்றும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளது. குரோம்பேட்டை இரயில் நிலையத்திற்குக் கிழக்கில் ஒரு குன்றின் மீது குமரன் குன்றம் உள்ளது.
கல்பாக்கம்
மத்திய அரசால் சுமார் 148 கோடி ரூபாய் மதிப்பில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மின்சாரம் பற்றாக்குறையை இவ்வணுமின்நிலையம் நிறைவு செய்கிறது. ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கும் அதிகமாக வெளிச் செலாவணி பெறுகிறது. கல்பாக்கம் நகரியம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட சீரான அமைப்புடையது. கடற்கரையைச் சார்ந்து சோலைகளின் நடுவே அமைந்துள்ளது.
மறைமலைநகர்
சென்னைக்குத் தெற்கில் 40 கி.மீ. தொலைவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் வாழும் வீட்டுமனைகளை இப்புதுநகர் உருவாக்கியுள்ளது. மறைமலைநகரின் தென்பால், சிறுதொழில் நிறுவனங்களுக்கென 15 ஏக்கர் நிலம் அமைத்து புதிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள சாலைகளின் நீளம் 5 கி.மீ. ஆகும். புதிய நகரியத்திற்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய வசதிகளும் கொண்டது மறைமலைநகர்.
காட்டாங்குளத்தூர்
மறைமலை நகருக்கு வடக்கில் உள்ள சிற்றுர். இங்கு அரசுத்துறை ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மற்றும் ஆய்வு நிலையங்களும் உள்ளன.
மாங்காடு
குன்றத்தூர் அருகிலுள்ள மாங்காடு கிராமத்தில் இருக்கும் மாங்காட்டு அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள். முக்கிய விழா நாட்களில் மாங்காடு செல்லச் சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன.
நாகல்கேணி
பம்மல் கிராமத்திற்கு அருகிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் தொழிலகங்கள் பல உள்ளன. இங்குப் பதனிடப்படும் தோல்கள் இந்தியாவில் பஞ்சாபுக்கும், மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் அந்நிய செலாவணி மிகுதியாகக் கிடைக்கிறது.
படாளம்
இவ்வூரில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடைபெறுகிறது. இது விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதி.
கவுல்பஜார்
பல்லாவரத்திற்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு தாதா பார்மசூடிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பலவிதப் பூக்கள் உள்ள தோட்டங்கள் ஏராளம். இங்கிருந்து சென்னைக்கும், அதன் சுற்றுபுறங்களுக்கும் பூக்கள் தினமும் அனுப்பப்படுகின்றன.
இருங்காட்டுக்கோட்டை
இங்கு ஆண்டுதோறும் கார் பந்தயம் நடைபெறுகின்றது.
புள்ளலூர்
காஞ்சி மாநகரிலிருந்து ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவில் கோவிந்தவாடிக்கு அருகில் உள்ளது. முதலாம் மகேந்திரவர்மன், புலிகேசி என்ற சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்த இடம். ஹைதர் அலி-திப்புசுல்தான் படைகள் கி.பி. 1780 இல் பெய்லி என்ற ஆங்கிலப் படைத்தளபதியை வெற்றி கொண்ட ஊர். கி.பி. 1781 இல் மீண்டும் ஹைதர் அலிக்கும் சர் அயர் கூட் என்ற ஆங்கில படைத்தளபதிக்கும் போர் நிகழ்ந்த இடம்.
பொலம்பாக்கம்
சோத்துப்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவிலும், மதுராந்தகத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. கேணிப் பாசனத்தைப் பயன்படுத்தி, புஞ்செய் பயிர்களோடு திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களும் இவ்வூரில் மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன.
சூணாம்பேடு
சூணாம்பேட்டிலிருந்து தென்னார்காடு மாவட்ட எல்லை 2 கி.மீ. தொலைவு. உப்பளத் தொழில் இங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது. அருகேயுள்ள காடுகளில் மரங்களை வெட்டி பங்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பும் வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது.

தொழில்





சென்னை மாநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. இரயில், பஸ், லாரி, விமான, கப்பல் போக்குவரத்து வசதிகள் நிறைந்தது. தொழில்சாலைகளுக்கு தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, மனித வளம் இம்மாவட்டத்தின் வடபால் மிகுதியால் கிடைக்கிறது.
பெருங்களத்தூர் மோட்டார் தொழிற்சாலை
இது சென்னையிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது. இங்கிலாந்திலுள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியின் கிளை அலுவலகமாக இத்தொழிற்சாலை முன்பு இயங்கி வந்தது. முதலில் குரோம்பேட்டையில் ஆரம்பித்த போது ஸ்டாண்டர்டு வான் கார்டு, பெர்சென் இயந்திரக் கலப்பைகளை இக்கம்பெனி தயாரித்தது. அடுத்த ஆண்டே இத்தொழிற்சாலைப் பெருங்களத்தூரில் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் மூன்று கோடி ரூபாய் ஆகும். தற்போது இத்தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது.
இங்கிலிஷ் எலெக்ட்ரிக் கம்பெனி
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 1959 இல் உற்பத்தி தொடங்கப்பட்டது. பியூஸ் வகைகள், மின் கம்பிகள், கீயர் பெட்டிகள் ஆகியன இங்கு தயாராகும் சிறப்பான பொருட்கள். இவை இந்தியாவெங்கும் அனுப்பப்படுகின்றன. அந்நிய நாடுகளுக்கும் மிகுதியாக ஏற்றுமதியாகின்றன.
படாளம் சர்க்கரை ஆலை
1958 இல் படாளம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சக்கரை ஆலை, மதுராந்தகம்கூட்டுறவு சர்க்கரை ஆலை என்னும் பெயரால் இயங்கி வருகிறது. ரூ.60 இலட்சம் முதலீடு கொண்ட இந்த ஆலை நாள் ஒன்றுக்கு சுமார் 1000 டன் கருப்பஞ்சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது.
சதர்ன் டயர் மானியூபாக்சரிங் (பி) லிமிடெட்
ரூ.40 இலட்சம் மூலதனத்தில் வண்டலூரில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கூப்பர் டயர் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழிற்சாலை மோட்டார்கார்கள், டிரக்குகள், ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களுக்குத் தேவையான டயர்களையும் டியூப்களையும் தயாரிக்கின்றது.
திருப்பெரும்புதூர் தொழிற்பூங்கா
திருப்பெரும்புதூர் அருகில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இந்தியத் தொழில்துறை தேசவரைபடத்தில் முக்கிய இடமாக மாறும் அளவுக்கு, இத்தொழில் பூங்காவை இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான நிறு தொழிற்சாலைகள் அமையவிருக்கின்றன. இதுவரை 15 தொழிற்சாலைகளுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவையாவன :
1) ஹூண்டாய் மோட்டார் இந்தியா
2) மாட்சு ஹூடா எலெக்ட்ரிக்
3) லுமாக்ஸ் சாம்லிப்
4) மர்குய்ப் இந்தியா
5) ஜே.பி.எம். சுங்க்வூ
6) லுஜூய் ஆட்டோ-மோடிவ்
7) ஜே.கே.எம். டேயரிம் ஆட்டோ மோடிவ்
8) டைனமேடிக் டெக்னாலஜஂஸ்
9) ஷர்டா மோட்டார்
10) மண்டோ பிரேக் சிஸ்டம்ஸ்
11) வேளியோ பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ்
12) போஸ்-ஹூண்டாய் ஸ்டீல் மேனுபாக்சரிங்
13) பி.எச்.சி. மேனுபாக்சரிங்
14) டாங்கீ விஷன்
15) யம்கோ ஜே.கே.எம். என்ஜியனீயரிங்
16வதாக பிரான்ஸ் நாட்டின் செயிண்ட்-கோபைன் மிதவைக் கண்ணாடித் தொழிற்சாலை ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் அரசு தொழிற்பூங்காவில் 22.1.98 அன்று தொடங்கப்பட்டது. செயிண்ட்-கோபைன் குரூப்பில் 42 நாடுகளில், 587 கம்பெனிகள், 1,10,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. கண்ணாடித் தொழிற் சாலைக்குத் தேவைப்படும் சிலிகா மணல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களிலும் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. மேலும் திருப்பெரும்புதூரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையும், ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனமும் அமைந்துள்ளன.

தொழில் வாய்ப்புகள்





தமிழக அரசு சிறுதொழில் மையம் இம்மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் குறைந்த முதலீட்டில் கீழ்கண்ட தொழில்களைத் தொடங்குமாறு அறிவித்துள்ளது.
  1. அட்டை தயாரித்தல்
  2. மணிலா எண்ணெய் தயாரித்தல்
  3. அரிசி தவிட்டு எண்ணெய் தயாரித்தல்
  4. கையால் பேப்பர் தயாரித்தல்
  5. மல்லிகைப்பூ எசைன்ஸ் தயாரித்தல்
  6. மாட்டுத்தீவனம்
  7. சேமியா
  8. பழரசம், ஜாம், ஜல்லி
  9. மருத்துவப் பயனுக்கான பஞ்சு
  10. மிட்டாய் வகைகள்
  11. வழைப்பழ, உருளைக்கிழங்கு வறுவல்
  12. மரப்பொம்மைகள், மரநாற்காலிகள் மேஜைகள், மரக்கதவுகள், ஜன்னல்கள்
  13. விசைத்தறிகள் உற்பத்தி செய்தல்
  14. தோல் பொருட்கள் : செருப்புகள், பெட்டிகள், பைகள், பெட்டிகள், தொழிலாளர் அணியும் கையுறைகள்
  15. விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, கொழு, மற்ற உபகரணங்கள்
  16. சைக்கிள்களுக்குத் தேவைப்படும் பெடல்கள், பிரேக்குகள், ஹப்புகள், ஸ்டாண்டுகள், பைகள், சிறிய பெட்டிகள், காரியர்கள். டியூப்லைட் பட்டிகள், டி.வி. பூஸ்டர்/ஆம்ளிபையர்
  17. உலோக குழாய்களால் ஆன நாற்காலிகள், மேஜைகள் பஸ் லாரிகளுக்கு பாடி கட்டுதல்
  18. அலுமினியப் பாத்திரங்கள், உபகரணங்கள்
  19. ரேடியோ, டி.வி., டேப்ரிகார்டர்கள் (பல உபபொருட்களை  கொண்டு பெட்டிகள் தயாரித்தல்)
  20. மின்சார மோட்டார் ரீவைண்டிங், ரிப்பேர் செய்தல்
  21. மைக்கா பொருட்கள் தயாரித்தல்
  22. பிளாஷ்டிக் பொருட்கள் செய்தல்
  23. சோபாக்களுக்கு வேண்டிய போம் இரப்பர் மெத்தைகள்
  24. பினாயில், சுத்தம் செய்யும் பவுடர், கிரீஸ், தார் இவைகளைத் தயாரித்தல்.
  25. வீடுகளுக்குத் தேவைப்படும் பெயிண்டுகள், வார்னிஷ் தயாரித்தல்.
  26. மருந்துகள் தயாரிக்கத் தேவைப்படும் அடிப்படை மருந்துப் பொருட்கள்
  27. விவசாயத்திற்குத் தேவைப்படும் உரங்கள் தயாரித்தல்.

கூட்டுறவு





காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டுறவு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். கூட்டுறவில் பணிபுரிய முன் வரும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்திடக் காஞ்சியில் கூட்டுறவு பயிற்சிச்சாலை ஒன்று உள்ளது. கூட்டுறவு வினியோக விற்பனைச் சங்கமும் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 1,25,000 பேர் கைத்தறி நெசவாளர்கள். இவர்களில் 70,000 பேர் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். பட்டு நெசவுக்காக சரிகை உற்பத்தி ஆலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. காமாட்சியம்மன் கூட்டுறவு நுற்பு ஆலை 1966 இல் தொடங்கப்பட்டது. 43 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இவ்வாலை 13,680 கதிர்களைக் கொண்டது. சுமார் 500 தொழிலாளர்கள் இங்குப் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் துயர்துடைக்க நிலவள வங்கிகளும் இயங்கி வருகின்றன. தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவை வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் பெற்று பல தொழில்களைத் தொடங்கினால் இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறும்.துயர்துடைக்க நிலவள வங்கிகளும் இயங்கி வருகின்றன. தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவை வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் பெற்று பல தொழில்களைத் தொடங்கினால் இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..